கலை / கலாச்சாரம்

தெருவில் ரங்கோலி..பார்க்கில் கச்சேரி..களைகட்டும் மைலாப்பூர் திருவிழா!

S CHANDRA MOULI
Margazhi Sangamam

மிக்ஜாம் புயல் வெள்ளத்தை அடுத்து, சென்னை இசைவிழா வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது, மைலாப்பூரில் “மைலாப்பூர் திருவிழா” களைகட்டுகிறது. 2000ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் மைலாப்பூர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மயிலை கபாலீசுவரர் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு மாட வீதிகளிலும் நடைபெறும் இந்த லோக்கல் திருவிழாவுக்கு துவக்கம் முதலே சுந்தரம் ஃபைனான்ஸ் ஆதரவளித்துவருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 4 முதல் 7 வரை நடைபெறும் மைலாப்பூர் திருவிழாவுக்கு இது இருபதாம் ஆண்டு. மைலாப்பூர்வாசிகளுக்கு கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டுகள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் கச்சேரி என்று சிறிய அளவில் துவங்கியது, இன்று நான்கு நாள் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

சரி! இந்த வருட மைலாப்பூர் திருவிழாவில் என்ன ஸ்பெஷல்? கோவிலை அடுத்த சன்னதித் தெருவில் மேடை போட்டு தினமும் மாலை நாதஸ்வரம், பிளஸ் அந்தக் கால தமிழ் சினிமாப்பாட்டு மெல்லிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், சிலம்பம் மற்றும் கிராமியக் கலைகள், சங்கீதப் பயித்தியம்-தமிழ் நாடகம் (எழுதியவர் பம்மல் சம்மந்த முதலியார்) என்று தினம் ஒரு நிகழ்ச்சி.

தவிர, நாகேஸ்வர ராவ் பூங்காவில் இரவு ஏழுமணிக்கு இசைநிகழ்ச்சிகள். தினமும் பிற்பகலில் கோலம் மற்றும் ரங்கோலி போட்டி, தாயக் கட்டம் பல்லாங்குழி மற்றும் செஸ் போட்டிகள். இன்னொரு பக்கம் பாயசம், சுண்டல் என்று இரு தலைப்புகளில் சமையல் போட்டி.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கைவினை மற்றும் துணிப்பை தயாரிப்புப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மைலால்லூரில் நடக்கும் திருவிழா என்ற போதிலும், மைலாப்பூரை ஒட்டிய மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

“கன்யாகுமரியைச் சேர்ந்த முத்துசந்திரன் தோல்பாவை கூத்துக் குழு இந்த ஆண்டு மைலாப்பூர் திருவிழாவில் பங்கேற்கிறார்கள். சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு தோல்பாவைக் கூத்து என்பது மிகவும் புதுசு என்பதால், அந்தக் கலைக் குழுவினர் மைலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பள்ளிகளிலும் தங்கள் நிகழ்ச்சியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் விழா நிர்வாகிகளுள் ஒருவரான வின்சென்ட் டொசோசா.

சுந்தரம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜிவ் லோசன், “பிளாஸ்டி பைகளை விடை கொடுப்போம்” என்ற கொள்கையின்படி, இந்த ஆண்டு மைலாப்பூர் திருவிழாவின்போது நான்கு நாட்களிலுமாக 2000 துணிப்பைகளை பொது மக்களுக்கு வினியோகிக்க இருக்கிறோம்!” என்று குறிப்பிட்டார்.

வேறு என்ன ஸ்பெஷல்? என்று கேட்டபோது, “மூன்று நடைச் சிற்றுலாக்கள் நடைபெறும். முதலாவது சிற்றுலா: மைலாப்பூரின் நொறுக்குத் தீனிக் கடைகள். சிற்றுலா கைடு கடைகளின் வரலாற்றை விவரிக்குக்போது பங்கேற்பவர்கள் அதைக் கேட்டு ரசித்தபடியே சொந்த செலவில் பிடித்த ஐட்டங்களை வாங்கி ருசிக்கலாம். (நேரம்: 90 நிமி) இரண்டாவது: பாரம்பரியம் மிக்க மைலாப்பூர் வீடுகள் (60 நிமிட நடை); மூன்றாவது: மைலாப்பூர் கோவில் உலா (80 நிமிடங்கள்)

மேலும் மைலாப்பூர் திருவிழாவின்போது மைலாப்பூருக்கு பெருமை சேர்க்கும் மனிதர்கள், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது கொடுக்கிறார்கள். இந்த வருட விருது யாருக்கு? “அது சஸ்பென்ஸ். ஏழாம் தேதி விழாவில் தெரியும்!” என்கிறார் ராஜிவ் லோசன்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT