ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்திற்கு அழகு தருவது மூக்குதான். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையைப் பார்க்க வரும் பெரியவர்கள் அந்தக் குழந்தையின் மூக்கையும், முழியையும் பார்த்து அவர்களின் எதிர்காலத்தை குத்து மதிப்பாக சாமுத்திரிகா லட்சணத்தின் அடிப்படையில் கூறுவார்கள்.
‘சாமுத்திரிகா லட்சணம்’ என்ற அங்க லட்சணங்களைக் கூறும் சாஸ்திரத்தில் மூக்கின் சிறப்புகளையும் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புகளைக் கொண்டு ஒருவரின் குணத்தை எடை போடலாம். ஒருவரின் மூக்கை வைத்து அவர்கள் எப்படியானவர்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தியா போன்ற நாடுகளில் வேதங்கள், புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அத்தகைய அறிவுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் சில வகையான மூக்கு வடிவம் மற்றும் அந்த நபர்களின் இயல்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
நேரான மூக்கு கொண்டவர்கள்: மெலிந்த நீண்ட மூக்கு உடையவர்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக, மதி நுட்பம் மிக்கவர்களாக இருப்பார்கள். அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். செல்வ செழிப்பானவர்கள்.
பெரிய மூக்கு கொண்டவர்கள்: முகத்தின் அமைப்பிலேயே சற்று வித்தியாசமான பெரிய மூக்கு படைத்தவர்கள் ஒரு விஷயத்தை நிதானமாக செய்வார்கள். தங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்வார்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள்.
கிளி போன்ற மூக்கு கொண்டவர்கள்: கிளி மூக்குக்காரர்கள் எதையும் வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் வலம் வருவார்கள். வாழ்க்கையில் உயர்ந்தவராய் இருப்பார்கள். அதுவும் பெண் என்றால் உயர்ந்த இடங்களில் திருமணம் நடக்கும். நல்ல சுகபோகங்களோடு வாழ்வார்கள்.
உருண்டையான மூக்கு: கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உருண்டையான மூக்கு அமைந்தவர்கள் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதித்துவிடுவார்கள். இவர்கள் எவரையும் பணியவைக்கும் வாக்கு வல்லமை படைத்தவர்கள்.
சப்பையான மூக்கு: தட்டை மூக்கு கொண்டவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருப்பார்கள். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் கவனமின்றி இருப்பார்கள். பொதுவாக கடினமான உழைப்பாளிகள்.
முனை சரிந்த மூக்கு: சிலருக்கு மூக்கின் முனை சற்று சரிந்து இருக்கும். இவர்கள் ராஜதந்திரத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். உலக விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.
முனை மழுங்கிய மூக்கு: இந்த ரக மூக்கு படைத்தவர்கள் முரட்டு சுபாவமும் பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மூக்கு துவாரம் பெரிதாக இருப்பவர்கள்: நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். நாணயமானவர்களாக வாழ்வார்கள்.
நேர் மூக்கு கொண்டவர்கள்: எந்த விஷயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என ஆசை கொள்வார்கள். நேரான உயர்ந்த மூக்கு அமைந்து, சிறிய மூக்கு துவாரம் இருந்துவிட்டால் அவர்கள் நாடாளும் நல்ல பதவியில் அமர்வார்கள் என சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது.