Rabindranath Tagore 
கலை / கலாச்சாரம்

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

கோவீ.ராஜேந்திரன்

ரு நாடுகளுக்கு தேசிய கீதங்களை எழுதிய உலகின் ஒரே கவிஞர் ஆசியாவில் முதல் முதலாக நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ரவீந்திரநாத் தாகூர். இவர் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861ம் ஆண்டு மே மாதம் 7ம் நாள் கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரது குடும்பத்தினர் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர்.

தாகூர், ஓவியம் , உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், தத்துவம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். முறையான கல்வியில் இவருக்கு நாட்டம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒரு நாள் மட்டுமே கல்வி பயின்றார். பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சர்வ கலாசாலையில் 1878ல் சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறாமலேயே 1880ல் நாடு திரும்பினார். பின்னர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

16வது வயதில், ‘பானு’ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். இவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடலான, ‘ஜன கண மன’ இந்திய தேசிய கீதமாகவும் மற்றொன்று வங்க தேசத்தின், 'அமர் சோனார் பங்களா' என்ற தேசிய கீதமாகவும் மாறியது. அதேசமயம், இலங்கையின் தேசிய கீதத்திலும் இவரது தாக்கம் தெரியும். 22 வயதில் மிருணாளினி தேவியை இவர் மணந்தார். 20 ஆண்டு இல்லற வாழ்வில் 5 குழந்தைகள் பிறந்தன. 1902ல் இவரது மனைவியின் மரணம் தாகூரை பெரிதும் பாதித்தது. அந்த சோகத்தில் அவர் இயற்றிய பாடல்கள்தான், ‘கனி திரட்டல்’ மற்றும் ‘ஸ்மரன்’ போன்றவை.

சுதந்திர போராட்ட காலத்தில் தேசிய எழுச்சி பாடலாக விளங்கிய பங்கிம் சந்திரர் இயற்றிய, ‘வந்தே மாதரம்’ பாடல் கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் தாகூர் பாடியதன் பின்தான் பிரபலமடைந்தது. ‘ரவீந்திர சங்கீத்’ இவரது இசைத்தட்டுகள் பெரிதும் பிரபலமடைந்தன. இவர் சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது, ‘சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார்.

கல்கத்தாவிலிருந்து 100 மைல் தொலைவில் பாழ் நிலத்தை விலைக்கு வாங்கி ஒரு ஆசிரமமும், கோயிலும் கட்டி 1863ல் அதற்கு, ‘சாந்தி நிகேதன்‘ எனப் பெயரிட்டார் தாகூரின் தந்தை. அங்கே ஒரு பள்ளியைத் தொடங்கினார் தாகூர். 1909ல் இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி, 1912ல் வெளியிடப்பட்டது. இந்த கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆசியாவில் முதல் முதலாக நோபல் பரிசு பெற்றவர் என்ற புகழ் பெற்றார். 1915ல் ஆங்கிலேய அரசு இவருக்கு, ‘சர்’ பட்டம் வழங்கியது. 1919ல் அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

தாகூர் 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்காக நிதி திரட்டினார். தமது பயண அனுபவங்களை, ‘யாத்ரி’ என்ற நூலில் எழுதியுள்ளார். வங்காளத்தின், குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளை இவர் எழுதியுள்ளார்.முசோலினியை ஒரு முறையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவை பலமுறைகளும் சந்திக்கும் வாய்ப்பு தாகூருக்குக் கிடைத்தது.

1921ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காக கிடைத்த பணம், (இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்),நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டார். ‘உலகம் முழுவதும் ஒரு கூட்டுக்குள்’ என்ற குறிக்கோள் வாசகத்துடன் விஸ்வ பாரதி அமைக்கப் பெற்றது. தனது உயிர் கொள்கையான தாய்வழி கல்வியை அங்கே நடைமுறைப்படுத்தினார். முதல் முறையாக பட்டமளிப்பு விழாவின் பேருரையை தாய்மொழியில் நிகழ்த்தியவர் தாகூர்தான்.

60 வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள், உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 350 தலைப்புகள், 80 படைப்புகள் கவிதை, நாடகம், உரைநடை இலக்கியம், நாவல், சிறுகதைகள், சுயசரிதை விமர்சனங்கள், கட்டுரைகள் என்று நாலரை லட்சம் வரிகளுக்கு மேல் இருக்கும் அவர் எழுதியது என்கிறது ஓர் ஆய்வு. அவரது நாடகங்களுக்கு அவரே பாடல்களை எழுதியுள்ளார். சில நாடகங்களில் அவரே நடித்தும் இருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது, ‘இருட்டறை அரசன்’ மற்றும் ‘டாக்டர்’ எனும் நாடகங்கள்.

தாகூர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது பல படைப்புகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தான் எழுதியவற்றை பிழை திருத்தம் செய்யும்போது வார்த்தைகளை அடிக்க நேர்ந்தால் அந்த வார்த்தையை பூ அல்லது இலை போன்ற சித்திரமாக ஆக்கிவிடும் பழக்கம் அவரிடம் இருந்தது.

மகாத்மா காந்தி இவரை குருதேவர் என்றே குறிப்பிடுவது வழக்கம். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சிறந்த சமூக சீர்திருத்தவாதி. இவர் முரண்படுகிறபோது தான் மதிக்கின்ற மகாத்மா காந்தி ஆகட்டும், தன்னை மதித்து அழைத்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளாக ட்டும் தனக்கு சரி என்று தோன்றுவதை பேசும் துணிச்சல் மிக்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். 1941ல் ஏப்ரலில் தனது 80வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட சில மாதங்களில் 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தாகூர் காலமானார்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT