திருவனந்தபுரம் நகருக்கு அருகில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முன்னாள் தலைநகரான பத்மநாபபுரத்தில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் அரண்மனை (கல்குளம் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது). இந்த அரண்மனை 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அற்புதமான சுவரோவியங்கள் (mural வகை) மற்றும் மலர் சிற்பங்களுக்காக பெயர் பெற்ற இடம் இது. இந்த அரண்மனையின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பத்மநாபபுரம் கிராமம் முற்காலத்தில் கல்குளம் என்று அழைக்கப்பட்டது. இது பலம் பொருந்திய வேணாடு ராஜ்ஜியத்தின் தலைநகராகத் திகழ்ந்தது. பத்மநாபபுரம் அரண்மனையின் வரலாறு 1600களில் தொடங்குகிறது. இந்த அரண்மனை ரவிவர்ம குலசேகரப் பெருமாள் காலத்தில் கட்டப்பட்டது. அதன் மையப்பகுதியில் கல்குளத்து கோயில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் பழைய பதிவுகளில் இக்கோயில், ‘தர்ப்பகுளங்கர கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.
பதினேழாம் நூற்றாண்டில் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இந்த அரண்மனையைப் புதுப்பிக்கவும், அதைச் சுற்றி ஒரு கல் கோட்டை அமைக்கவும் உத்தரவிட்டார். தற்போதைய அரண்மனை வளாகத்தில் உள்ள பல கட்டமைப்புகள் அவரது ஆட்சியின்போதுதான் கட்டப்பட்டன / புதுப்பிக்கப்பட்டன.
மார்த்தாண்ட வர்மா இந்த அரண்மனையை வேணாட்டின் காக்கும் கடவுளான ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்த அரண்மனை பத்மநாபபுரம் கொட்டாரம் (கொட்டாரம் என்றால் மலையாளத்தில் அரண்மனை எனப் பொருள்) என மறு பெயரிடப்பட்டது.
1809ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் பத்மநாபபுரத்தைக் கைப்பற்றிய பின்னர், இந்த அரச குடும்பம் திருவனந்தபுரத்துக்கு இடம் பெயர்ந்தது. இருப்பினும், அவர்கள் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது இந்த அரண்மனைக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், அந்த பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் 1840களில் நிறுத்தப்பட்டபோது பத்மநாபபுரம் அரண்மனையின் வீழ்ச்சி தொடங்கியது.
பின்னர், 1934ம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசின் கலை ஆலோசகர் ஜே.எச்.கசின்ஸ் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆர்.வாசுதேவ பொடுவாள் ஆகியோர் இந்த அரண்மனையை ஆய்வு செய்தனர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜாவான ஸ்ரீ சித்திர திருநாள் பாலராம வர்மாவின் ஆதரவுடன், கேரளாவின் பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியக வளாகமாக மாற்றப்பட்டது.
இந்த அரண்மனை வளாகம். கேரளாவின் கட்டடக்கலை பாணியில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. அரண்மனையின் அடித்தளம் மற்றும் தரைத்தளத்தின் தூண்களில் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டையைச் சுற்றி ஒரு அகழி இருந்தது. ‘முக்ய வாத்தில்’ வளாகத்தின் முதன்மை நுழைவாயிலாக இருந்தது.
பத்மநாபபுரம் அரண்மனை கட்டுமானத்தில் மரமே முக்கியப் பங்கு வகித்தது. அரண்மனை சுவர்கள், கூரை, தூண்கள் மற்றும் விட்டங்களில் மரமே பயன்படுத்தப்பட்டது. தரை அமைப்பில் சுண்ணாம்பு போன்றவை முதன்மைப் பொருளாக பயன்படுத்தப்பட்டன. கட்டடத்தின் பெரும்பகுதி செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் பல கட்டடங்களும் பகுதிகளும் தாழ்வாரங்கள் மற்றும் மேல்நிலை நடைபாதைகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. காலத்தின் மாற்றங்களில் பல்வேறு சோதனைகளைத் தாங்கி நிற்கும் இந்த பத்மநாபபுரம் அரண்மனை, மரம் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட சிறந்த கலைப்படைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திருவனந்தபுரம் பத்மநாபபுரம் அரண்மனை வளாகம் பன்னிரண்டு கட்டமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. அவை: 1. முக்ய வாத்தில் மற்றும் முற்றம், 2. பூமுக மாளிகை, 3. மந்திரசாலை, 4. தாய் கொட்டாரம், 5. உப்பரிகை மாளிகை, 6. நவராத்திரி மண்டபம், 7. வல்லிய ஒட்டுப்புழா, 8. ஹோமப்புழா, 9. தெக்குத்தெருவு மாளிகை, 10. இந்திரா விலாசம், 11. ஆயுதப்புழா, 12. லட்சுமி விலாசம்.
பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
பத்மநாபபுரம் அரண்மனையை பார்வையிட சிறந்த பருவம் குளிர்காலம். இது அக்டோபரில் தொடங்கி, பிப்ரவரியில் முடிவடைகிறது. நாள் முழுவதும் வெப்பநிலை இதமாக இருக்கும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட மழைக்காலத்தில் இங்கு செல்வதைத் தவிர்க்கலாம். காலை நேரத்தில் அங்கே செல்ல திட்டமிடுங்கள். இதன் மூலம் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க போதுமான நேரத்தை நீங்கள் பெறலாம். (அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.)