Paitkar Painting 
கலை / கலாச்சாரம்

Paitkar Painting: ஜார்க்கண்டின் பாரம்பரிய ஓவியமான பைட்கர் ஓவியத்தின் சுவாரசியங்கள்!

பாரதி

இந்தியாவின் பல பாரம்பரிய ஓவியங்களில் நாம் அறியாத ஒன்று ஜார்க்கண்டின் பாரம்பரிய ஓவியமான பைட்கார் ஓவியம். பண்டைய கிராம மக்களால் விரும்பி வரையப்பட்ட இந்த ஓவியம், ஒரு அழகிய கலைப் படைப்பாகும்.

ஜார்க்கண்டின் சுருள் ஓவியம் என்றழைக்கப்படும் இந்த ஓவியம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற இடங்களிலும் மிகவும் புகழ்பெற்றதாகும். ஜார்க்கண்டின் சந்தால் பழங்குடியினர் உருவாக்கிய இந்த கலைப்படைப்பு கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையானது. பைட்கார் ஓவியங்களை வரைபவர்கள் பைட்கார் கலைஞர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

இவர்கள் பனை ஓலைகளையும் அணில் மற்றும் ஆட்டின் முடிகளைத் தூரிகைகளாக தயாரித்தும் பயன்படுத்தினார்கள். ஜார்க்கண்டில் உள்ள அமடுபி என்ற கிராம வாசிகளே இந்த கலையைத் தோற்றுவித்து, இன்றுவரைப் பாதுகாத்து வருகின்றனர். இன்று அமடுபியில் வெறும் 40 முதல் 50 வீடுகள் வரையே உள்ளன. இந்தக் கலையைப் பற்றிய நுனுக்கங்களை முழு கிராமமும் அறிந்திருந்தாலும், மூன்று முதல் நான்கு பேர் மட்டுமே பயிற்சி செய்து வருகின்றனர் என்பதுதான் வேதனைக்குறியது.

இப்படி பெரும்பாலான அமடுபி கிராம வாசிகள் அக்கலையை கைவிட்டதற்கு காரணம் பொருளாதார ரீதியாக லாபம் இல்லை என்றே. இருப்பினும், அரசு மனது வைத்தால், இதுபோன்ற பழமை வாய்ந்த பாரம்பரிய ஓவியக் கலைகளை நம்மால் காக்க முடியும்.

Paitkar Paintings

அனைத்து கலை ஓவியங்களுக்கும் ஒரு கருப்பொருள் இருக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில், இந்த ஓவியத்திற்கும் ஒரு கருப்பொருள் உள்ளது. அதாவது இந்த கிராம மக்கள் முதல் முதலில் எந்த ஆர்வத்தில் இந்த ஓவியத்தை உருவாக்கினார்கள் என்றால், இறந்தப்பின் மனிதர்கள் என்ன ஆவார்கள், எங்கு செல்வார்கள் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றுதான்.

அதுவே இதன் கருப்பொருளாகும். இதனால், பைட்கர் ஓவியம் இறந்தவர்களை சொர்க்கம் அனுப்பும் ஓவியம் என்று அவர்களால் நம்பப்படுகிறது. அவர்களை அனைத்து வலிகளிலிருந்தும் முக்திக் கொடுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், சமூக- மத பழக்கவழக்கங்களிலும் நீண்டக் காலமாக இந்த ஓவியம் பயன்படுத்தப்படுகிறது. இந்து புராணங்களிலிருந்து சிவன், துர்கா போன்ற தெய்வங்களையும் அவர்களின் செயல்களையும் கதையாக இந்த ஓவியம் மூலம் விவரிக்கின்றனர். அதேபோல் பாம்பு தெய்வமான மானசா என்ற அவர்களின் உள்ளூர் தெய்வம் பற்றிய கதையும் விளக்கப்படுகிறது. இந்த ஓவியத்திற்கு முதன்மையாக சில வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது சிவப்பு, மஞ்சள், மற்றும் நீலம் ஆகியவை.

ஓவியக் கலைகளுக்கு ஏராளமான கதைகளும், பின்னணிகளும், வரலாறும் இருந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றுதான். கலை ரசிகர்களின் பசியைப் போக்குவது. அதுவும் பாரம்பரிய கலை ஓவியம் என்றால், அதன் மகத்துவமே தனித்துவம்தானே.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT