நடன மாதர்கள் என்றாலும் ஜல்லிக்கட்டு காளைகள் என்றாலும் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ‘ஜல்… ஜல்…’ என்ற சலங்கை ஒலிதான். நாட்டிய மங்கையரின் கால்களை அலங்கரிக்கும் இந்த சலங்கைகள், ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கின்றன. இந்த சலங்கைகளைப் பற்றியும் அதனை தயாரிக்கும் ஊரைப் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
நடன மங்கையின் கால்களை அலங்கரிக்கும் சலங்கை ஒலி நாட்டியத்துக்கு நயம் சேர்க்கும். அதேபோல், ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் அணியும் மணியின் சத்தம் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும். ஜல்... ஜல்... என்ற சலங்கை சத்தத்துடன் ஓடிவரும் காளையைக் காண்போருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.
இப்படி நடனமாடுபவர்களின் காலில் அணியும் சலங்கை மணியையும் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் அணியும் சலங்கை மணிகளையும் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட்நாயக்கன்பட்டியில் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.
இங்கு தயாரிக்கும் சலங்கைக்கு தனி சத்தம் உண்டு. லேசாக ஆட்டினாலே 'க்ளுக்' என்று சத்தம் வரும். எடை, நிறம், சத்தம் இப்படி எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை இங்கு வாங்கும் சலங்கையில் மட்டும்தான் உணர முடியும். சிறிய அளவாக சலங்கை இருப்பினும் அதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. பித்தளையால் உருவாக்கப்படும் இந்த சலங்கையில் 24 வகையான வேலைப்பாடுகள் உள்ளன.
சாணம், களிமண், செம்மண், படிமண், குங்கிலியம், விளக்கெண்ணெய், பித்தளை, அலுமினியம் எல்லாம் கலந்துதான் சலங்கையை தயாரிக்கிறார்கள். என்னதான் ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் கையால் செய்யக்கூடிய தொழில் இது. சாணத்தை சுத்தமாக்குவது அவ்வளவு லேசான விஷயம் இல்லை. சலங்கை செய்வதற்கான சாணம், மண் இந்தப் பகுதியிலேயே கிடைப்பதால்தான் இங்கு சலங்கை உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது.
பித்தளையும் அலுமினியமும் சேர்ந்து ஒரு கிலோ 500 ரூபாய், ஒரு கிலோ கலவைக்கு 10 கிராம் அளவு சலங்கைகள் 60 எண்ணிக்கையில் தயாரிக்கிறார்கள். அளவுக்கேற்றபடி ஒரு சலங்கை 15 முதல் 500 ரூபாய் வரை இருக்கிறது. மாடுகளுக்கு நெற்றியில் கட்டும் நிலா, சங்கு, மாம்பிஞ்சு, காசு இதெல்லாம் கூட இங்கு தயாரிக்கப்படும் பிற பொருட்கள் ஆகும்.
முதலில் தனித்தனியாக சலங்கையை தயாரித்தவர்கள் இப்போது மகளிர் குழுவாக இணைந்து தயாரித்து மொத்தமாக விற்பனைக்கு அனுப்புகிறார்கள். மாதத்திற்கு 300 கிலோ சலங்கைகள் தயார் செய்யும் இவர்கள், வாரம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பாரம்பரியமான காலத்தால் அழியாத பொருட்களுக்கு என்றும் மதிப்புள்ளது என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது.