Tailoring 
கலை / கலாச்சாரம்

இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?

கலைமதி சிவகுரு

மனதை ஒருங்கிணைக்கும் கலைகளில் சிறந்த கலை தையல் கலை. தையல் கலை என்பது மிகவும் எளிதானதும், பயன் உள்ளதும் ஆகும். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மிகவும் முக்கியமானது. இவற்றில் உடையை வடிவமைத்து பயன்படுத்தும் முறைகளிலும், அணியும் வகையிலும் தையல் கலையை அனேகமாக பெண்கள்தான் ஆர்வத்துடன் கற்கிறார்கள். இது ஓர் அருமையான தொழிலுமாகும்.

குடும்பப் பெண்கள் தையல் பழகிக்கொண்டால் தமது தேவைக்கான சாரிக்கு ஓரம் அடித்தல், பிளவுஸ் வெட்டி தைத்தல், பாவாடை, சட்டை, நைட்டி என அனைத்து வகையான உடைகளையும் தைத்துக்கொள்வதுடன் தாம் விரும்பிய டிசைன்களிலும் விதவிதமாகத் தைத்துக்கொள்ள முடியும். இந்தக் காலகட்டத்தில் தையலுக்கு என்று மிகவும் அதிகப் பணம் தேவைபடுகிறது. தாமே தைத்துக்கொண்டால் பெரும் தொகை மிச்சமாகும்.

மேலும், தையல் கலையை வைத்து தன்னுடைய கற்பனை சக்தி மூலம் வீட்டை அலங்கரிக்கலாம். எளிதில் தைக்க கூடிய தலையணை உறை, ஜன்னல், கதவுகளுக்கு கர்ட்டன் தைக்கலாம். மேஜை விரிப்புகள், சோபா கவர்கள், வாசிங்மிஷின், மிக்ஸி, கிரைண்டர்களுக்கு கவர்கள் தைத்து அழகு பார்க்கலாம்.

அவசரத்துக்கு கிழிந்த துணிகளை தைத்துக்கொள்ளலாம். முதலில் பட்டன் தைத்தல், காஜா போடுதல், துண்டுகள், பெட்சீட்டுகளுக்கு ஓரம் அடித்தல் இவற்றை இலகுவாக கற்றுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைக்கு ஒட்டு உடுப்பு கடைகளில் வாங்காமல் நாமே தைத்துக்கொள்ளலாம்.

தையல் என்பது ஒரு தனிநபரின் உடல் அளவிற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்தல் ஆகும். வெட்டுதல், பொருத்துதல் மேலும் பிரித்து தைத்தல் இவற்றை எல்லாம் கற்பனை சக்தியின் மூலம் அழகு பட செய்வதே ஒருதனி கலைதானே! இப்படி, நம் கற்பனை திறனுக்கு ஏற்ப திறமைகளை அதிகரித்து நுணுக்கமாகவும், அழகாகவும் தைப்பது மூலம் மன நிறைவு ஏற்படுகிறது.

மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகள், மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அதனை சரியான முறையில் ஆர்வத்துடன் தன் கற்பனை திறனின் மூலம் அழகு பட தைத்துக் கொடுப்பது கலை உணர்ச்சி உள்ளவர்களால் நன்கு செய்ய முடியும்.

எம்பிராய்டரி மற்றும் ஆரி ஒர்க் என்பது பாரம்பரிய கைவினைத் திறன் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் கலவையாகும். எம்பிராய்டரி என்பது ஒரு வகை ஊசி வேலை. எம்பிராய்டரி என்பது பெண்களின் தரம் மற்றும் சமூக வெளிபாட்டை வெளிபடுத்தும் ஒரு திறமை வாய்ந்த கலை ஆகும். முதலில் எம்பிராய்டரி செய்வது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும் அது வளர்ந்து பெண்கள் மத்தியில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

தையல் வேலையை கலை நயத்துடன் செய்யும்போது அதற்கு பெயர்தான் ‘தையல்கலை'. அந்த தையல் கலையைத் தொழில் பக்தியுடன் சிரத்தையுடன் செய்யும்போது அதற்கு பெயர் 'தையல் தொழில்'.

நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் தையல் தொழில். வீட்டிலிருந்து தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்கி விடலாம். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் அவர்களோடு இணைந்தும் இந்தத் தொழிலைச் செய்யலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT