Symbol of love built by a wife for her husband 
கலை / கலாச்சாரம்

கணவனுக்காக மனைவி கட்டிய காதல் சின்ன படிக்கிணறு!

நான்சி மலர்

காதல் சின்னம் என்று கூறியதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மஹால்தான். அது ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய காதல் சின்னமாகும். கணவன் தனது மனைவியின் நினைவாகக் கட்டிய காதல் சின்னம் இதுவென்றால், மனைவி தனது காதல் கணவனுக்காகக் கட்டிய காதல் சின்னம் ஒன்று உள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

குஜராத் மாநிலம், பதான் என்ற ஊரில் இருக்கும், ‘ராணி கீ வாவ்’தான் அந்த காதல் சின்னம். இது சரஸ்வதி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. ராணி கீ வாவ் என்றால் ராணியின் படிக்கிணறு என்று பொருள். இந்தப் படிக் கிணற்றை 11ம் நூற்றாண்டில் உதயமதி என்னும் ராணி தனது கணவனான சாலுக்கிய அரசன் பீமாவுக்காகக் கட்டினார். இந்தக் கிணறு சிக்கலான மற்றும் அலங்கரிக்கப்பட்ட செதுக்குதலுக்காகப் புகழ் பெற்றது. இது 64 மீட்டர் அகலமும் 27 அடி ஆழமும் கொண்டது. கிணறுகள் புனிதமாகவும், தண்ணீர் சேகரித்து வைத்துக்கொள்வதற்கு பயனுள்ளதாகவும் கருதப்பட்டது.

இந்தப் படிக்கிணற்றை 1940ல் திரும்பக் கண்டுப்பிடித்த இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1980ல் இந்த இடத்தினை மீட்டெடுத்தது. இது 2014ல் இருந்து உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிணற்றை பார்க்கும்போது தலைகீழாக கோயிலின் கோபுரத்தை வடிவமைத்தது போல இருக்கும். இதுவே இந்தக் கிணற்றின் சிறப்பம்சமாகும். அதில் ஏழு நிலைகளாக 500 சிற்பங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கிணற்றில் இருக்கும் சிற்பத்தின் கைவினைத்திறனைப் பார்க்க வியப்பாக இருக்கும்.

இந்தக் கிணற்றை மாறு-குஜாரா கட்டடக்கலை பாணியில் வடிவமைந்துள்ளர். அதன் கலைநுணுக்கமும் அழகும் சிற்பங்களில் வெளிப்படுவதைக் காணலாம். இதனால் இந்தக் கிணற்றின் கலாசாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைக் கருதி அதைப் புதிதாக அச்சடிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டில் வெளியிட்டு சிறப்பித்தது இந்திய அரசாங்கம். இதில் இருக்கும் சிற்பங்கள் விஷ்ணுவின் மீது கொண்ட பக்தியால் அமைக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ராணி கீ வாவ் கிணறு உலகப் பாரம்பரிய பட்டியலில் இருப்பதால் இதை மிகவும் பாதுகாப்பாக கவனித்து கொள்கிறார்கள். இங்கே வரும் சுற்றுலா பயணிகள் இக்கிணற்று சிலைகளை தொடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு 15 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ராணி கீ வாவ் கிணறு சுத்தமான நினைவுச் சின்னம் என்று 2016ல் இந்திய சுகாதார மாநாடு அறிவித்தது. இந்த இடத்தை ஒரு முறையாவது அதன் அழகிய சிற்ப வேலைப்பாட்டிற்காகவே போய் சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT