Terrace of the Leper King 
கலை / கலாச்சாரம்

தொழுநோயாளி மன்னனின் மொட்டை மாடி! (Terrace of the Leper King)

தேனி மு.சுப்பிரமணி

கம்போடியாவின் அங்கோர் தோம் நகரின் அரச சதுக்கத்தின் வடமேற்கு மூலையில் தொழு நோயாளி மன்னனின் மேல் தளம் (Terrace of the Leper King) ஒன்று அமைந்துள்ளது. இது ஏழாம் செயவர்மனின் கீழ் பேயோன் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த சிலையினை இந்து சமய மரணக் கடவுளான எமன் சிலை என்று ஒரு பிரிவினரும், இந்தச் சிலை, தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலாம் யசோவர்மன் சிலை என்று ஒரு பிரிவினரும் தெரிவிக்கின்றனர். 

முதலாம் யசோவர்மன் சிலைதான்:

கடுமையான வெயில் மற்றும் வெப்பமண்டல வானிலை காரணமாக இந்தச் சிலையில் ஏற்பட்டிருக்கும் அரிப்பு மற்றும் திட்டுகளால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை, இச்சிலை மனிதர்களுக்கான சரும நோய் ஏற்பட்ட சிலை போன்ற தோற்றத்தைத் தருகிறது. எனவே, இந்தச் சிலை தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலாம் யசோவர்மன் சிலையே என்றும், அந்தச் சிலையில் அடியில் பொறிக்கப்பட்டிருக்கும் 'தர்மராசன்' எனும் பெயர், கம்போடியர்கள் அவனை அன்புடன் அழைத்த பெயர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக, கம்போடிய புராணக்கதை ஒன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு அறிஞர்கள், கம்போடியாவில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு அரசன் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கின்றனர். எனவே, இந்தச் சிலை தொழுநோய் மன்னன் முதலாம் யசோவர்மன் சிலைதான் என்று ஒரு பிரிவினர் சொல்கின்றனர்.

எமனின் சிலைதான்:

நிர்வாண ஆண் உருவமாக அமைந்த இந்தச் சிலை, வலிமையான உடல், தட்டையான முடி, முகத்தில் மீசை, உதடுகளில் இருந்து இரண்டு கோரைப் பற்கள் கொண்டதாக இருக்கிறது. மேலும் இந்தச் சிலையானது, வலது முழங்காலை உயர்த்தி, வலது கை  ஒரு ஆயுதத்தைப் பிடித்திருப்பதைப் போன்ற நிலையிலும், இடது கை அவரது இடது காலில் பதிந்திருப்பது போன்று அமர்ந்த நிலையிலும் இருக்கிறது. இந்தச் சிலையின் தோற்றம், இதே போன்று அமர்ந்த நிலையில், வலது தோளில் சூலாயுதத்தை ஏந்திய நிலையில் இருக்கும் எமன் சிலையுடன் ஒத்திருக்கிறது. எமனைத் தர்மராசன் என்ற பெயரில்தான் அழைப்பார்கள். மேலும், அந்தக் காலத்தில் அரச குடும்பத்தினர்களின் தகனச் சடங்குகள் மேலே மொட்டை மாடியில் நடத்தப் பெறும் என்பதால், அங்கு மரணக் கடவுளான எமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு, இச்சிலை எமனின் சிலைதான் என்று மற்றொரு பிரிவினர் சொல்கின்றனர். 

பதின்மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த மொட்டை மாடியில் அமைந்திருக்கும் ஒரு கல்வெட்டில், “மாட்சிமை பொருந்திய தர்மாதிபதி - ஆதிராஜாவுக்கு (எமன் என்று பொருள்) சிறிய தட்டில் பிரசாதம் அளித்தார். இந்தக் காணிக்கையை யார் எடுத்துக்கொள்கிறார்களோ அவர் நரகத்தில் ஒப்படைக்கப்படுவர். மேலும், எதிர்காலத்தின் சக்திவாய்ந்த புத்தர்களால் அவர்களை விடுவிக்க முடியாது” என்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது.

கல்வெட்டிலுள்ள செய்தி, இந்தச் சிலை ‘எமன் சிலை’ என்பதை உறுதிப்படுத்துகிறது என்று சிலர் சொல்கின்றனர். இந்தக் கல்வெட்டு, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், 13 ஆம் நூற்றாண்டிலேயே இந்த மொட்டை மாடி அமைக்கப்பட்டுவிட்டதால், இந்தச் சிலையின் பாதுகாப்பிற்காக, இந்தச் செய்திக் குறிப்பு கல்வெட்டு பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சிலர் அதை மறுக்கின்றனர்.    

இந்தச் சிலை குறித்து, இருவேறான கருத்துகள் சொல்லப்பட்டாலும், கம்போடிய மக்களால், இந்தச் சிலை அமைந்திருக்கும் இடம், 'தொழு நோயாளி மன்னனின் மேல் தளம்' (Terrace of the Leper King) அல்லது 'தொழு நோயாளி மன்னனின் மொட்டை மாடி' என்றேச் சொல்லப்படுகிறது.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT