சிலம்பம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலையாகும். தமிழ் சங்க இலக்கியங்களில் சிலம்பக் கலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இது மூங்கில் குச்சிகள் மூலம் பயிற்சி செய்யப்படுகிறது. சிலம்பப் பயிற்சி செய்வது உடல், மனம் மற்றும் கலாசார நன்மைகளை வழங்குகிறது.
உடல் ரீதியான நன்மைகள்:
மேம்படுத்தப்பட்ட உடற்தகுதி: சிலம்பம் விளையாடுவது ஆரோக்கியம், உடல் வலிமை, நெகிழ்வுத் தன்மை மற்றும் உடல் இயக்கங்கள் நன்றாக நடைபெறுவதற்கு உதவுகிறது. சிலம்பக் கலையை பயிற்சி செய்யும்போது உடல் இயக்கங்களுக்கு துல்லியம் மற்றும் சமநிலை தேவைப்படுகிறது. இது ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது.
தசை தொனி: வழக்கமான சிலம்பப் பயிற்சி உடலின் பல்வேறு பகுதிகளில் தசை வளர்ச்சியை வலியுறுத்துகிறது. ‘மசில் டோன்’ எனப்படும் சிறந்த தசை தொனியைத் தருகிறது மற்றும் உடல் கட்டுக்கோப்பாக விளங்க உதவுகிறது.
சுறுசுறுப்பு: சிலம்பம் விளையாடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்பாகவும் அனிச்சையாகவும் செயல்பட உதவுகிறது. இது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கும் நன்மை பயப்பதாக இருக்கிறது.
கை, கண் ஒருங்கிணைப்பு: சிலம்பத்தில் உள்ள நுட்பங்கள் கை மற்றும் கண் ஒருங்கிணைப்புக்கு பெருமளவு உதவுகின்றன. கண்கள் பார்க்கும் காட்சிகளுக்கு ஏற்ற துல்லியமான பார்வைத் திறன் மற்றும் கைகளின் சீரிய இயக்கத்திற்கும் உதவுகிறது. இது பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக அமைகிறது.
மனநல பயன்கள்:
கவனம் மற்றும் செறிவு: சிலம்பம் பயிற்சி செய்வதற்கு மனக் கூர்மை மற்றும் செறிவு தேவைப்படுகிறது. இது நுண்ணிய விவரங்களில் கவனத்தை வளர்க்க உதவுகிறது. கவனம் குவிக்கும் ஆற்றலை வளர்க்கிறது.
மன அழுத்த நிவாரணம்: சிலம்பம் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து, மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது.
தன்னம்பிக்கை அதிகரிப்பு: சிலம்பம் பயிற்சி செய்யும்போது அது பயிற்சி செய்பவர்களின் தற்காப்பு நுட்பங்களை மேம்படுத்துகிறது. அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பையும் அளிக்கிறது.
அறிவாற்றல் வளர்ச்சி: சிலம்பக் கலையை கற்கும்போதும் அதை செயல்படுத்தும் நுட்பங்களில் மனத்தை ஈடுபடுத்தும்போதும் சிக்கல்களை தீர்க்கும் திறனை அளிக்கிறது. சிந்தனையையும் அறிவாற்றல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
கலாசார மற்றும் சமூக நன்மைகள்:
கலாசார பாரம்பரியம்: சிலம்பக்கலை தமிழ் கலாசாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இவற்றை கற்றுக் கொள்பவர்கள் பாரம்பரிய நடைமுறைகளில் ஈடுபடவும் கலாசார பாரம்பரியத்தை நிலைநாட்டவும் உதவுகிறது.
சமூக உணர்வு: சிலம்ப வகுப்புகளில் கலந்து கொள்வதும் சிலம்பக்கலையை பயிற்சி செய்யும்போதும் பயிற்சியாளர்கள் மத்தியில் ஒரு சமூக உணர்வை வளர்க்கிறது. இந்த தற்காப்பு கலை ஆசிரியர்கள் சக பயிற்சியாளர்கள் மற்றும் கலைக்கான மரியாதையை வலியுறுத்துகிறது. சிலம்பம் கற்பவர்களிடம் ஒழுக்கம் மற்றும் மரியாதையை விதைக்கிறது.
அதிகரித்த சுயமரியாதை: தற்காப்புக் கலையான சிலம்பத்தில் ஒருவருடைய சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நுட்பங்கள் ஏராளமாக உள்ளன.
கூடுதல் நன்மைகள்: சிலம்பக் கலையை பயிற்சி செய்வது உடல் இயக்கங்களை கூர்மையாக்குகிறது. எந்தவிதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் பிரசன்ஸ் ஆப் மைண்ட் என்று சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படவும் உதவுகிறது. இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வரும்போது உடல் தோரணை நன்றாக அமையும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். கலாசார விழாக்களில் நடனம் போன்ற வடிவமாக நிகழ்த்தப்படுகிறது. எனவே, இது ஒருவரின் படைப்பு வெளிப்பாடு மற்றும் செயல் திறனுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.