திருநெல்வேலியில் அருள்மிகு காந்திமதி அம்மன் சமேத நெல்லையப்பர் திருக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான கோயிலாகும். நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்தத் தூண்களில் இருந்து வெளிப்படும் சப்தஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நெல்லையப்பர் சன்னிதிக்கு செல்லும் வழியில் மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குதான் தட்டினால் பல வகை ஓசை தரும் கறுத்தத் தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் 10 தூண்கள் கூட்டம் உள்ளது. ஒரு தூண் கூட்டம் என்பது ஒரே பெரிய கல்லில் செய்யப்பட்டது. மத்தியில் ஒரு பெரிய தூணும் சுற்றிலும் உருவத்திலும் உயரத்திலும் மாறுபட்ட பல சிறிய தூண்களும் கொண்ட தொகுப்பாக இருக்கிறது. இந்த சிறிய தூண்களை தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு வகையான வாத்திய ஒலி வருகிறது. பெரிய தூண்கள் ஸ்வரங்கள் மாறுபட்டு இருக்கிறது. அனைத்து தூண்களும் அலங்கார சிற்ப வேலைப்பாடுகளுடன் கருமை நிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இவற்றில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டு தூண் கூட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இந்தத் தூண் கூட்டத்தின் நடுவில் ஒரு பெரிய தூணும் சுற்றிலும் 48 சிறிய தூண்களும் உள்ளன. இவை மற்றவற்றை விட அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இனிமையான ஓசையையும் தருகிறது. இந்த மண்டபத்தில் மொத்தம் 161 சிறிய தூண்கள் உள்ளன. இது, ‘சர்வ வாத்ய மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் தனித்துவமானவை. ஒரு பெரிய துணிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று பிராகாரங்களைக் கொண்ட இந்தக் கோயிலின் முதல் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. இரண்டாம் பிராகாரத்தில் ஏழிசை சுரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே, ‘ச ரி க ம ப த நி’ என்ற ஏழு சுரங்கள் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக்கூடியவை.
பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும் அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்தக் காலத்தில் திருவிழாக்களின்போது இசைக்கலைஞர்கள் இந்தத் தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற இசைத்தூண்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது. எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்றுவரை வியப்பையே தருகிறது.
இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். ஆனால், கற்களால் செதுக்கப்பட்ட இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்குக் காரணம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்புகின்றன என்பது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலிலும், குலசேகர மண்டபத்தில் நான்கு தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறுசிறு தூண்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு பெரிய தூண்கள் 33 சிறு தூண்களையும் மற்ற இரண்டு தூண்கள் 25 சிறு தூண்களையும் கொண்டது. ஒவ்வொரு சிறிய தூணையும் தட்டும்போது விதவிதமான ஓசையை எழுப்புகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசை தூண்கள் உள்ளன. ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசை தூண்கள் உள்ளன. நடுவில் ஒரு துணை சுற்றி பல வடிவங்களில் 22 தூண்களோடு அமைந்த அமைப்பு வேறு வேறு ஸ்வரங்களை உபயோகப்படுத்தி நவரோஸ், குறிஞ்சி ராகங்களை இசைக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி கோயிலிலும் இரண்டு இசை தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது. மற்றதில் ஊதி இசை எழுப்பும்படி இரு துளைகள் உள்ளன. ஒன்றில் ஊதினால் சங்கின் ஒலியும் மற்றதில் ஊதினால் எக்காளம் ஒலியும் கேட்கிறது.
எவ்வளவு அற்புதமான இசைத்தூண்கள். அந்தக் கால மன்னர்களின், கலைஞர்களின் கலைத் திறமையை சிரம் தாழ்த்தி வணங்கி அவற்றை பார்த்தும் இசைத்தும் பாதுகாத்தும் மகிழ்வோம்.