குடைவரை கோயில் R.V.Pathi
கலை / கலாச்சாரம்

திருக்கழுக்குன்றத்தில் உள்ள பல்லவர் கால ‘ஒரு கல் மண்டபம்’ குடைவரை கோயில் தெரியுமா?

ஆர்.வி.பதி

மிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பல்லவர்கள் குடைவரைகளை அமைத்துள்ளார்கள். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், வல்லம், பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில்முட்டம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சி, மண்டகப்பட்டு, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரக்கண்டநல்லூர், சிங்கவரம், மேலச்சேரி, சாளுவன்குப்பம், ஆவூர் முதலான பல பகுதிகளில் பல்லவர்கள் உருவாக்கிய குடைவரைகள் இன்று வரை நிலைத்து அவர்களுடைய கலைத்திறனை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

குடைவரை கோயில் கருவறை

திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோயிலாகும். இம்மலைக்கோயிலின் இறங்கும் பாதையில் ஒரு மிகப்பெரிய பாறையைக் குடைந்து கி.பி.610 முதல் கி.பி.640ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த பல்லவப் பேரரசர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், ‘ஒரு கல் மண்டபம்’ எனும் சிவனுக்குரிய குடைவரைக் கோயிலை அமைத்துள்ளார்.

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரையின் முக மண்டபத்தின் வடபுறத்தில் முழுத்தூணின் மேற்சதுரத்தில் கிழக்கு முகத்தில் மிகவும் சிதிலமடைந்த நரசிம்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. மேலும் இங்கு பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.

குடைவரை கோயில் சிற்பங்கள்

மலையிலிருந்து இறக்கும் பாதையின் வலது புறத்தில் அமைந்துள்ளது, ‘ஒரு கல் மண்டபம்’ எனும் குடைவரை. குடைவரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஏழு படிக்கட்டுகளைக் கடந்து இக்குடைவரையை அடைய முடிகிறது. குடைவரை முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற வடிவத்தில் அமைந்த நான்கு தூண்கள் காணப்படுகின்றன. தூண்களின் கீழ் மற்றும் மேல் பாகங்கள் சதுரமாகவும் இடையில் எட்டுப்பட்டைகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத் தூண்களும் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் அமைந்துள்ளன. தூண்களின் மேற்புறத்தில் அமைந்துள்ள பெரிய வடிவிலான போதிகைகள் உத்திரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

முதலாம் மகேந்திரவர்மன் காலத்துப்பாணி கல்வெட்டு

முகப்புத் தூண்களை அடுத்து குடைவரையின் மையப்பகுதியில் இதேபோன்ற அமைப்பில் மேலும் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்புத் தூண்கள் பகுதியிலிருந்து இரண்டாவது வரிசைத் தூண்கள் வரை உள்ள பகுதியானது முக மண்டபம் என்றும், இரண்டாவது வரிசைத் தூண்களிலிருந்து கருவறை வரை உள்ள பகுதியானது அர்த்த மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது. முகமண்டபத்தின் வடக்குப்புறம் மற்றும் தெற்குப்புறச் சுவர்களில் நின்ற நிலை அடியவர்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையின் உள்ளே லிங்கத் திருமேனி அமைந்துள்ளது. இந்த லிங்கத்திருமேனி பிற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கருவறையின் முகப்பில் பக்கத்திற்கொன்றாக இரு துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையின் வெளியே தெற்குப் பகுதியில் பிரம்மதேவனும் வடக்குப் பகுதியில் மகாவிஷ்ணுவும் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திருக்கழுக்குன்றம், ‘ஒரு கல் மண்டப’ குடைவரை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT