Traditional Thanjavur painting 
கலை / கலாச்சாரம்

மனதை கொள்ளைகொள்ளும் பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியங்கள்!

ஆர்.வி.பதி

யிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியம்மிக்க தஞ்சாவூர் ஓவியங்கள் (Tanjore Paintings) மனதை கொள்ளைகொள்ளுபவை. காண்போரை வியப்புக்குள்ளாக்குபவை. தஞ்சாவூர் ஓவிய பாணியானது சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சையில் தோன்றி பதினேழாம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட ஒரு வகை ஓவியமாகும். தஞ்சை ஓவியம் என்பது விலையுயர்ந்த கற்கள், தங்கத் தகடுகள், வெள்ளித் தகடுகளைப் பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்படும் முற்றிலும் வித்தியாசமான ஓவியக்கலை பாணி ஆகும்.

தஞ்சாவூர் ஓவியங்களானது சோழர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய ஒரு ஓவிய கலையாகக் கருதப்படுகிறது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனை வளாகத்தில் அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டன. தஞ்சை மன்னர்கள், விஜயநகரப் பேரரசர்கள் முதலான ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு பெரும் ஆதரவு அளித்து இந்த அரிய ஓவியக்கலையினை வளர்த்தனர். தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் கலைகளில் பெரும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். சரபோஜி மன்னர் தஞ்சாவூர் ஓவியர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார். மன்னர்கள் வழங்கிய ஆதரவின் காரணமாக தஞ்சாவூர் ஓவியக்கலையானது பதினாறாரம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பெரும் வளர்ச்சி கண்டது.

தஞ்சாவூர், திருவாரூர் முதலான ஊர்களில் தஞ்சை ஓவியங்கள் பல வீடுகளை அலங்கரித்தன. பெரும்பாலும் இந்து மதக் கடவுள்களும், மன்னர்களின் உருவங்களும் ஓவியங்களாக வரையப்பட்டன. வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணன், ஆலிலை மேல் குழந்தைக் கிருஷ்ணன், இராமர் பட்டாபிஷேகம், தேவியர் உருவங்கள் முதலான கடவுள்களின் உருவங்கள் வரையப்பட்டன. அன்னப்பறவை தஞ்சாவூர் ஓவியங்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு உருவமாகும். தஞ்சை ஓவியங்களுக்கான வண்ணங்கள் தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையாக தயாரிக்கப்பட்டன. இத்தகைய இயற்கை வண்ணங்களால் வரையப்படுவதால் இவை காலம் கடந்தும் வண்ணம் மாறாமல் அப்படியே வியப்பூட்டும் வகையில் இருக்கின்றன.

தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா மரத்தின் பலகைகளில்தான் வரையப்படுகின்றன. முதலில் பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகையின் மீது இரண்டு அடுக்குகளாகத் துணியை ஒட்டிக் காய வைப்பர். இதன் மீது முதலில் வரைய வேண்டிய ஓவியங்களை வரைந்து (Pencil Sketch) கொண்டு அதன் பின்னர் வண்ணங்கள், விலையுயர்ந்த கற்கள், வண்ணமயமான கண்ணாடித் துண்டுகள், தங்க மற்றும் வெள்ளித் தகடுகளைப் பயன்படுத்தி அலங்கரித்து முடிப்பார்கள்.

மரபு வழி சார்ந்த பழைய தஞ்சை ஓவியர்கள் கடவுள் உருவங்களையும் அரசர்களையும் வரைந்தனர். தற்காலத்தில் இத்தகைய ஓவியங்கள் சற்று

நவீனமயமாகி விட்டன என்றே சொல்லலாம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றுவரை நின்று நிலைத்து நமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன தஞ்சாவூர் ஓவியங்கள் என்றால் அது மிகையல்ல. தற்போதைய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் இந்த ஓவியக் கலையினைப் பயின்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.

பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் ஓவியம் இந்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் முதலான கைவினைப் பொருட்களும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறக்கத்தையும் இழக்காதீர்கள்: வாழ்வின் உச்சங்களையும் இழக்காதீர்கள்!

குழந்தையின் கோபத்தை மாற்றும் நான்கு மந்திர வார்த்தைகள்!

அன்பை அசைத்து விடாமல் இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம்!

‘மோஷன் சிக்னஸ்’ பிரச்னைக்கான காரணங்களும் தீர்வுகளும்!

காலம் தவறிய தேடுதல் தேவையற்றது!

SCROLL FOR NEXT