Diwali 
கலை / கலாச்சாரம்

பல ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்தியாவின் இரண்டு ஊர்கள் - காரணம் என்ன?

ராஜமருதவேல்

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சம்மூ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடுவது இல்லை.

சம்மூவில், தீபாவளி அன்று வீடுகள் இருட்டாகவும், விளக்குகள் மற்றும் பட்டாசுகளின் சத்தங்கள் இல்லாமல் நாள் நகர்கிறது.

ஒரு பழைய நம்பிக்கையின் படி, பல  நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு தீபாவளியைக் கொண்டாடச் சென்றாள். அப்போது மன்னன் அரசவையில் வீரனாக இருந்த அவளது கணவன் இறந்துவிட்டான். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், அதிர்ச்சி தாங்க முடியாமல் தனது கணவனின் சிதையில் உடன்கட்டை ஏறினாள். அதன் பின்னர் அந்த கிராமத்தில் தீபாவளி அன்று மோசமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன. அதனால், மக்கள் சதி ஏறிய பெண்ணின் சாபம் காரணமாக இருக்கும் என்று கருதி தீபாவளி பண்டிகையை தவிர்த்தனர்.

அதன்பின் அதுவே தொடர்கதையானது. சம்மூ கிராம பெரியவர்கள் இளையோர்களை தீபம் ஏற்றுதல் அல்லது ஏதேனும் சிறப்பு உணவைத் தயாரிப்பது போன்ற எந்த ஒரு கொண்டாட்டமும் கூடாது; அது துரதிர்ஷ்டம்,பேரழிவு மற்றும் இறப்புகளை வரவழைக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

வெளியில் இருந்து சம்மூவிற்கு திருமணமாகி வந்த பல பெண்களும் தீபாவளி கொண்டாடுவதை பார்த்ததே இல்லை. இக்கிராம மக்கள் வெளியில் குடியேறினாலும், சதியேறிய பெண்ணின் சாபம் தங்களை விட்டு நீங்காது என நம்புகின்றனர். கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வேறொரு நகரத்தில் குடியேறியபோது, தீபாவளிக்கு சிறப்பு உணவுகள் தயாரித்தபோது, ​​அவர்களது வீடு தீப்பிடித்தது. இதனால் இந்த காலத்திலும் சம்மூ மக்களின் நம்பிக்கை மாறுவதில்லை.

எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி  70க்கும் மேற்பட்ட தீபாவளிகளைக் கடந்த அந்த  கிராமத்து பெரியவர் ஒருவர், "தீபாவளியைக் கொண்டாட யாராவது முயற்சிக்கும் போதெல்லாம், சில துரதிர்ஷ்டங்கள் அல்லது இழப்புகள் ஏற்படுகின்றன என்றார். இதனால் கிராம மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதைத் தவிர்த்து வருகின்றனர்" என்றார்.

தீபாவளியை கொண்டாடாத இன்னொரு இந்தியப் பகுதி கர்நாடக மாநிலம் , மைசூருக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு கொண்ட மேல்கோட் நகரமாகும்.

மைசூரை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் கிருஷ்ணராஜ வாடியாரின் தளபதியாக இருந்தவன் ஹைதர் அலி. இவர் 1761 இல் ஆட்சியை கைப்பற்றினான். மேல்கோட்டில் மாண்டியம் ஐயங்கார் சமூகத்தினர் மைசூர் வாடியார் மன்னர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை பெற்று ஹைதர் அலியை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டனர். ஹைதர் அலி இந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்து, இந்தத் திட்டத்தின் முன்னணியில் இருந்த இரண்டு சகோதரர்களைக் கைது செய்தான். சமூகத்தில் உள்ள மற்றவர்கள் துன்புறுத்தலுக்கு பயந்து மெட்ராஸ் பிரசிடென்சிக்கு தப்பினர்.

ஹைதர் அலி இறந்ததும் அவரது மகன் திப்பு சுல்தான் 1780 இல் அரியணை ஏறினான். தனக்கு எதிராக இருக்கும் மாண்டியம் சமூகத்தை மொத்தமாக அழித்தொழிக்க முடிவு செய்தான். தீபாவளி நாளில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள நரசிம்மசுவாமி கோவிலில் வழிபடச் சென்ற மாண்டியம் ஐயங்கார் சமூகத்தினர் உள்பட அனைவரையும் சுற்றி வளைத்து திப்பு படையினர் தாக்கி 800 பேரை கொன்று குவித்தனர். மீதமிருந்த சிலர் அருகிலுள்ள புளிய மரங்களில் தூக்கிலிடப்பட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு நடந்த இந்த படுகொலை சம்பவங்கள் மேல்கோட் மக்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிப் போனது. பின்னாளில் பல சமூகத்தவர் மேல்கோட் நகரத்தில் குடியேறினாலும் அந்த துர் சம்பவத்தை நினைத்து இன்று வரையிலும் தீபாவளி கொண்டாடுவதில்லை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT