White House 
கலை / கலாச்சாரம்

வெள்ளை மாளிகை கட்டுமான வரலாறு - மாளிகையை வடிவமைத்தது யார்?

ராஜமருதவேல்

உலகின் அதிக பாதுகாப்பு மிக்க அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் உலகளாவிய அதிகாரம் பெரியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகராக முதலில் பிலடெல்பியா இருந்தது.1790 ஆம் ஆண்டின் வசிப்பிடச் சட்டத்தால் புதிய தலைநகர் வாஷிங்டன் டிசி நிறுவப்பட்டது. புதிய தலைநகரம் நவீன முறையில் எதிர்காலத்திற்கு தகுந்த முறையிலும் வடிவமைக்கப்பட்டது.

நகரைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் சதுப்பு நிலங்கள் உறைபனி ஆகியவை மக்களை குடியேற்றுவதில் சவாலாக இருந்தது. மக்களை ஏராளமாக குடியேற்ற , தொழில் சாலைகள், வணிக தலங்கள் அமைக்க முன்னோடியாக அதிபர் மாளிகையை முதலில் கட்ட தீர்மானித்தனர். அது குடியேறும் மக்களுக்கு பெரிய நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் முதல் அதிபரான வாஷிங்டன், அதிபர் மாளிகையை கட்டும் இடத்தினை தேர்வு செய்தார். கட்டிடத்தின் வடிவமைப்பிற்கான போட்டியைத் தொடங்கினார். இந்தப் போட்டியில் ஐரிஷ் கட்டிடக் கலைஞர் 'ஜேம்ஸ் ஹோபன்' வெற்றி பெற்றார். தென் கரோலினாவின் சார்லஸ்டனில் கட்டிடங்களை கட்டியதில் புகழ் பெற்றதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்காக அவருக்கு 500 டாலர்கள் பரிசு கிடைத்தது.

வெள்ளை மாளிகையின் நியோகிளாசிக்கல் வடிவமைப்பு புகழ்பெற்ற ரோமானிய கட்டிடக் கலைஞர் விட்ருவியஸ் மற்றும் வெனிஸ் கட்டிடக் கலைஞர் ஆண்ட்ரியா பல்லாடியோ ஆகியோரை பின்பற்றி வடிவமைக்கப்பட்டது. இதில் பண்டைய கிரேக்க வடிவமைப்புக்கும் பாதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோபன், ஐரிஷ் பாராளுமன்ற கட்டிடத்தால் ஈர்க்கப்பட்டு அது போன்ற வடிவத்தையும் புகுத்தினார். 

1792 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி நண்பகல் வேளையில், வாஷிங்டன் டிசியில் இல் உள்ள எண் 1600, பென்சில்வேனியா அவென்யூ பிரசிடன்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு வெள்ளை மாளிகையின் கட்டுமானம் துவங்கியது. ஆனால் அதிபர் வாஷிங்டன் பதவிக்காலம் முடியும் வரையில் அதன் கட்டுமானப் பணி தொடர்ந்தது .

வெள்ளை மாளிகையை கட்ட பெரும்பாலும் ஆப்பிரிக்க - அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். சில முக்கிய வேலைகளுக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டனர். கட்டுமானத்தின் போது ஆப்பிரிக்க அடிமைப் படுத்தப்பட்ட மக்களுக்கு உடை தேவைகளுக்காக பொது பணம் வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு ஐரோப்பிய தொழிலாளிகளுக்கு இணையான எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. அடிமையாக வேலை செய்ததால் அவர்களின் ஊதியத்தை முழுமையாக அவர்களின் முதலாளிகள் சுரண்டினர், அவர்கள் தங்குவதற்கு சிறு குடிசைகளும் உணவும் சொற்ப தொகையும் வழங்கப்பட்டது.

இறுதியாக 1800 நவம்பர் 1 ஆம் தேதி அனைத்துப் பணிகளும் முடிந்து குடியேற தகுதியானது.1800 வாக்கில், அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஆடம்ஸ் குடியேறினார். அப்போது அதிபர் மாளிகை என்ற பெயர் தான் இருந்தது.1812 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரில் பிரிட்டிஷ் படைகள் வாஷிங்டன் நகரத்தை தீக்கிரையாக்கினர். இதில் அதிபர் மாளிகை வெளிப்புற சுவர் தவிர அனைத்தும் இடிந்தது. அங்கிருந்த பொருட்களை எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் கொள்ளையடித்தனர். மீண்டும் ஹோபனுக்கு புனரமைக்கும் பணி கிடைத்தது. மாளிகையின் எஞ்சிய பகுதியையும் இடித்து விட்டு புதிதாக மாளிகையை மீண்டும் கட்டினர். 

வெள்ளை மாளிகையின் தெற்கு வாயில் 1824 இல் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வடக்கு போர்டிகோ 1830 இல் சேர்க்கப்பட்டது. இன்று வெள்ளை மாளிகை மொத்தம் 132 அறைகளைக் கொண்டுள்ளது. மாளிகையின் வெளிப்புற மணற்கற்களைப் பாதுகாக்க சுண்ணாம்பு அடிப்படையிலான வண்ணம் பூசப்பட்டதால் இதற்கு வெள்ளை மாளிகை என்ற பெயர் வந்தது. பலமுறை இந்த மாளிகைக்கு வெள்ளை பூச்சு பூசப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் அடையாளமாக உள்ளது. அதில்  நூற்றுக்கணக்கான அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் உழைப்பும் உள்ளது. அதிபர் ரூஸ்வெல்ட், அதிபர் ஜான் கென்னடி காலத்தில் மாளிகையில் பல வசதிகள் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT