Vajiram and Ravi
கலை / கலாச்சாரம்

மிரள வைக்கும் கொனார்க் சூரிய கோயிலின் அதிசயங்கள்!

நான்சி மலர்

கோயில்கள் என்றாலே அதிசயம்தான். அதிலும் மர்மம் நிறைந்திருக்கும் கோயில் என்றால் அதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடத்தானே செய்யும். அப்படி இந்தியாவில் இருக்கும் ஒரு கோயில்தான் கொனார்க் சூரியக் கோயில்.

சூரிய பகவானுக்குரிய இந்தக் கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது ஒடிசா மாவட்டத்தில் உள்ள பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. கங்கா வம்சாவளியை சேர்ந்த நரசிம்மதேவன் என்ற அரசனே இக்கோயிலைக் கட்டினார். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயில் அதனுடைய தனித்துவத்திற்காகவும் அதனுடைய கட்டமைப்பு முறைக்காகவும் பெயர் பெற்றதாகும். இந்தக் கோயிலில் உள்ள சக்கரம் போன்ற செதுக்கப்பட்ட அமைப்பு கடிகாரம் போல செயல்படுவது ஆச்சர்யமான விஷயமாக உள்ளது.

Konark Sun Temple

கொனார்க் என்றால் சூரியனும் அதன் நான்கு மூலைகளும் என்று பொருள். முதல் சூரிய கதிர் இக்கோயிலின் வாசலிலே விழும் என்று கூறப்படுகிறது. இக்கோயில் ‘கருப்பு பகோடா’ என்று அழைப்படுகிறது. காரணம், இக்கோயில் கருங்கல் பாறைகளால் கட்டப்பட்டதாகும். கப்பலில் பயணிக்கும் மாலுமிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல இது செயல்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கொனார்க் கோயில் கலிங்க கட்டடக்கலைக்கு பெயர் போனதாகும். இங்கு 100 அடி உயரமுள்ள தேரை குதிரைகள் இழுப்பது போல ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட சிலை உள்ளது. இது சூரிய கடவுளின் தேரை குறிக்கிறது. இங்கே இன்னும் 128 அடி உயரம் கொண்ட மக்களுக்கான அறை, நடன அறை, உணவருந்தும் அறைகள் உள்ளன. ஒரு பக்கத்துக்கு 12 சக்கரங்கள் வீதம் இருபுறமும் 24 சக்கரங்கள் கொண்ட இந்தத் தேரை 7 குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு குதிரைகள் என்பது வாரத்தின் ஏழு நாட்களையும் 12 சக்கரம் என்பது வருடத்தின் 12 மாதங்களையும், மொத்தம் 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தை குறிக்கிறது.

Konark Sun Temple

கொனார்க் கோயிலில் இருக்கும் சூரிய கடிகாரம் சரியான நேரத்தை கணித்து சொல்லும் என்று கூறுகிறார்கள். அது வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் சூரிய ஒளியை தன்னுள் உள்வாங்கி சரியான நேரத்தை நிழல் காட்டுமாம். கொனார்க் கோயிலில் சூரிய கடவுளின் சிலை அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்ததாம். ஏனெனில், இக்கோயிலை காந்தத்தினால் கட்டினார்கள் என்ற புராணக் கதையும் உண்டு. அதற்கு ஏதும் சரியான சான்றுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

1909 அகழ்வாய்வின்போது சூரியக் கோயிலின் மேற்கு பகுதியில் மாயா தேவியின் கோயிலை கண்டுபிடித்தனர். இக்கோயில் சூரியனின் மனைவியான மாயா தேவிக்காக கட்டப்பட்டதாகும். இக்கோயில் சூரிய கோயிலை விடவே பழைமையானதாகும். இந்தக் கோவிலை 11ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயில் சூரிய கடவுளுக்காக எழுப்பப்பட்டது என்றாலும் இக்கோயிலில் சூரிய கடவுளின் சிலை என்று எதுவும் இல்லை. அதற்குக் காரணம் கோயிலைக் கட்டி முடிப்பதற்காக நரசிம்மதேவா கொடுத்த காலநேரம் கடந்ததால் 1200 வேலையாட்களின் உயிரை எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

காலாபஹாத் 1508ல் ஒரிசாவின் மீது படையெடுத்தபோது கொனார்க் கோயிலையும் சேர்த்து நிறைய இந்து கோயில்களை அழித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய 10 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் கொனார்க் கோயிலின் படம் இடம்பெற்றிருப்பது இக்கோயிலின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

கொனார்க் கோயில் அதன் கலை அழகு மற்றும் அதிசயத்தை ரசிப்பதற்காகவே வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய இடமாக கருதப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT