வறண்ட கூந்தல், எண்ணெய் கூந்தல் பலவீனமான கூந்தல் என்று கூந்தலை 3 வகையாகப் பிரிக்கலாம். இதை எப்படி தெரிந்து கொள்வது? பலவீனமான கூந்தலுக்கு மருத்துவம் எப்படி செய்து பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தலைக்கு குளித்த மூன்றாவது நாள் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து கூந்தலின் வேர் பகுதியில் நன்கு அழுத்தி எடுத்தால் அப்போது தாளில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் அது எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் என தெரிந்துவிடும்.
தாளில் எண்ணெய் பசை இல்லாவிடில் வறண்ட கூந்தல் என்று தெரிந்து கொள்ளலாம். இதை வீட்டில் உள்ள பெரியவர்களே சாதாரணமாக பார்த்து கண்டுபிடித்து கூறிவிடுவார்கள். எண்ணெய் பசை உள்ள கூந்தலில் ஒரு மினுமினுப்பு இருக்கும். வறண்ட கூந்தலின் நுனியில் வெடிப்புகள் இருக்கும். மேலும் தலையில் எண்ணெய் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் கூட வறண்டு போய்விடும்.
வறண்ட கூந்தலை உடையவர்கள் அடிக்கடி எண்ணெய் தேய்த்து பராமரித்தால் நல்ல மினுமினுப்பு கிடைக்கும். முடியும் செம்பட்டை நிறத்தில் இருந்து இயற்கை நிறத்திற்கு திரும்பும். அதற்கு நல்ல போஷாக்காண ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தயாரிக்கும் இயற்கையான ஷாம்புகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. செயற்கை ஷாம்புகளை தள்ளுபடி செய்து விட வேண்டும்.
எண்ணெய் பசை உள்ள கூந்தலுக்கு மருதாணி பேக் போட்டு பராமரிக்கலாம். வாரத்தில் மூன்று முறையாவது தலைக்கு குளித்தால் அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும்.
பலவீனமான கூந்தலை பராமரிக்க சற்று பொறுமை வேண்டும். நேரம் தவறி சாப்பிடுவது, கடினமான நீர் உபயோகிப்பது, தலை முடியை ப்ளீச் செய்வது, சாயம் பூசுவது, வெயிலில் அதிகமாக அலைவது போன்ற பல காரணங்களால் கூந்தல் பலவீனமாகிவிடுகிறது. கூந்தல் முனைகளும் வறண்டுவிடும். முடிகளின் மற்ற பகுதிகளும் உடைந்து உதிர ஆரம்பிக்கும். இத்தகைய கூந்தலுக்கு தலை குளித்தவுடன் ஈரத்தோடு எண்ணெய் பூசி உடனடியாக தலை வாரக்கூடாது. கூந்தலின் வேர்ப்பகுதி பலவீனமாக இருப்பதால் நிறைய முடி கொட்ட ஆரம்பித்துவிடும். ஆதலால் அதிக அக்கறை உடன் கவனித்து கொள்வது நல்லது.
இந்த வகை முடி உடையவர்கள் கேரட் சாறை உபயோகித்து மசாஜ் செய்யலாம். பாதாம் எண்ணெய் அல்லது தினசரி உபயோகிக்கும் எண்ணெய்யில் மசாஜ் செய்யலாம். அதிகமான சுடுநீரில் குளிக்க கூடாது. மிதமான வெந்நீரில் குளிக்கலாம். கூந்தலை டவலால் அடித்து காயவைக்க கூடாது. அப்படி செய்தால் பலவீனமாக முடி உதிர்வதோடு வெடிப்பும் உண்டாகும்.
வெந்தயம், சோற்றுக்கற்றாழை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, புங்கங்காய் இவற்றை இடித்து தண்ணீர் கலந்து அடுப்பில் இட்டு நன்கு கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி உபயோகிக்கலாம்.
அடிக்கடி கலரிங் ப்ளீச் போன்றவற்றை செய்வதை நிறுத்தினாலே முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.