மணப்பெண்ணாவதற்கு முன்னர் உங்களைத் தயார் செய்துக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. முகம், உடல், சருமம், கூந்தல் போன்ற அனைத்தையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.
* முதலில் முகத்திற்கு நாம் எப்போதுமே க்ளென்ஸர், டோனர் மற்றும் மாய்ஸ்டரைஸர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவை முகச்சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
இவற்றைக் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். அல்லது வீட்டிலும் செய்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முதலில் க்ளென்ஸரை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் டோனர் பயன்படுத்த வேண்டும். அது ரோஸ் வாட்டராகக்கூட இருக்கலாம். இது முகத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து சருமத்திற்குள் கிருமிகள் போகாமல் தடுக்கும்.
அதன் பின்னர் மாய்ஸ்ட்ரைஸரை முகத்தில் பயன்படுத்த வேண்டும். இது முகச்சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும்.
இவற்றை அனைவருமே தினமும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாகத் திருமணம் செய்துக்கொள்ளப் போகும் பெண்கள் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
* வெளியில் செல்வதற்கு முன்னர் சூரிய ஒளியிலிருந்து முகச்சருமத்தைப் பாதுகாக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் முகம் கருத்துவிடும்.
சருமத்தில் அதிகமாகப் பருக்கள் இருந்தாலோ அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷன் இருந்தாலோ கண்டிப்பாக பார்லர் சென்று அவர்களுடைய முகத்தின் சருமத்திற்கு ஏற்றவாரு சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும். அதனை Facial Spa என்றுக் கேட்டு செய்துக்கொள்ளவும்.
* அதேபோல் கூந்தலையும் பராமரிக்க வேண்டும். வீட்டிலேயே வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது வாசனை எண்ணெய் களைப் பயன்படுத்தி மசாஜ் செய்துக் கொள்ளலாம்.
வீட்டில் ஆயில் மசாஜ் செய்கையில் ரோஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் சிலத் துளிகள் மட்டும் கலந்துத் தலையில் தடவி மசாஜ் செய்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஹேர் பேக் போட வேண்டும். அதற்கு சில பவுடர்கள் உள்ளன. செம்பருத்திப்பூ, வல்லாரை இலை, பிரிங்கராஜ் (கரிசிலாங்கண்ணி) போன்ற பவுடர்களைக் கலந்து ஹேர் பேக் செய்ய வேண்டும். ஆயில் மசாஜிற்கு பின் இந்தப் பவுடரைத் தேய்த்துத் தலைக்குக் குளிக்கவேண்டும். இந்த ஹேர் பேக்குகளை கடை களிலும் வாங்கிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருநாள் செய்ய வேண்டும். இதனால் பொடுகு, முடி உதிர்வு போன்றப் பிரச்னைகள் நின்றுவிடும்.
வீட்டில் மசாஜ் செய்ய விரும்பாதவர்கள் பார்லர் சென்று Oil massage, Hot oil massage, Hair softening treatment அல்லது Hair Spa போன்றவற்றைச் செய்துக்கொள்ளலாம்.
அதே போல் தலையில் அதிகப் பொடுகு இருந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
* அதன் பிறகு சருமப் பரமாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தயிர், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் கலந்து பேஸ்ட் செய்துவைத்துக்கொள்ள வேண்டும். முதலில் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின் அந்தப் பேஸ்ட்டைத் தடவி உடம்பு முழுவதும் ஸ்க்ரப் செய்தாலே சுத்தமாகிவிடும்.
எண்ணெயை உடம்பில் தேய்க்க விரும்பாதவர்கள் குளித்து முடித்துவிட்டு Body Lotion பயன்படுத்தலாம். குளித்ததும் உடம்பில் உள்ள அனைத்து நீரையும் நன்றாகத் துடைத்துவிட்டு, அதன்பின் உடம்பு முழுவதும் இந்த Body Lotionஐ பயன்படுத்தலாம். இதனால் முகத்தின் நிறமும் உடம்பின் நிறமும் எந்த நிறமாற்றமும் இல்லாமல் சமமாக இருக்கும்.
* தன் அழகில் கவனம் செலுத்தும் மணப்பெண்ணாகப் போகிறவர், 6 மாதங்களுக்கு முன்பாகவே தன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பழங்களும் நீரும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் உடம்பில் உள்ள சத்துக்கள் சரிசமமாக உள்ளதா என்பதையும் அவ்வப்போது கவனமுடன் பார்த்துக்கொள்ளவும்.
* மேலும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும், மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் திருமணத்தன்று கடைசி நேரத்தில் முகப்பருப் போன்ற பிரச்னைகள் வராது. அதேபோல் அன்றைய தினத்தில் உங்களின் முகமும் பொலிவாக இருக்கும்.
* கணினி, மொபைல் போன்றவற்றைப் பார்த்துக் கருவளையம் வந்துவிட்டதென்றால் அதனையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது வெள்ளரிக்காய் துருவலை எடுத்து கண்கள் மற்று கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளவும். இதற்கு உருளைக்கிழங்கின் சாறும் பயன்படுத்தலாம்.
மேற்படி குறிப்பிட்டுள்ளவை அனைத்தையும் கவனத்துடன் கடைப்பிடித்தால் மணமேடையில் நீங்கள் தேவதைப்போல் தெரிவது நிச்சயம். அப்படி எல்லாவற்றையும் செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு விஷயங்களை மட்டுமாவது, திருமணத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பாக, அவசியம் செய்யுங்கள்:
வீட்டில் தினப்படி பயன்படுத்த சில க்ரீம்களையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். ஏனெனில் நமது முகச்சருமத்திற்கு ஈரப்பதம் என்பது மிகவும் அவசியம். க்ரீம்களை தொடர்ந்து தினமும் பயன்படுத்துவதால் முகம் ஆரோக்கியமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.
அதேபோல் கடைகளில் கூந்தலைப் பராமரிக்கும் சீரம் என்ற பொருள் உள்ளது. முடி வளர்வதற்கான சீரம் வாங்கி அதனைப் பயன்படுத்தினால் கூந்தலையும் சீராகப் பராமரிக்கலாம்.