-ம. வசந்தி
விளக்கெண்ணெய் என்பது (castor oil) ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் (ricinus communis) ஆகும். இது பிற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாக இருக்கிறது. எனவே சற்று பிசுபிசுப்புடன் காணப்படும். விளக்கெண்ணெய் பெண்களுக்கு பல வழிகளில் உதவி புரிந்து அழகு ராணிகளாக மாற்றுகிறது.
புருவம் முடி வளர்ச்சிக்கு
புருவ முடி வளராமல் இருப்பவர்கள் தினமும் இரவில் விளக்கெண்ணையை தடவி வரலாம். விளக்கெண்ணையை தொடர்ந்து 60 நாட்கள் தடவி வரும்போது நல்ல அடர்த்தியான புருவ முடிகள் வளர்வதை காணலாம்.
கூந்தல் ஆரோக்கியம்
விளக்கெண்ணையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களில் ஆழமாக ஊடுருவி ஊட்டமளித்து பலப்படுத்துகிறது. இது மேம்பட்ட முடி வலிமை மற்றும் உடைப்பு குறைவதற்கு வழிவகுக்கும். விளக்கெண்ணெய் வைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு விளக்கெண்ணெய் மிகச்சிறந்த மருந்து. புது முடியின் வளர்ச்சிக்கும் இந்த விளக்கெண்ணெய் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சம அளவு கலந்து தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வரலாம். இது ஆண்டி மைக்ரோபியல் தன்மையை கொண்டு உள்ளதால் பேன் தொந்தரவுகளையும் விரட்டியடிக்கிறதது.
முகப்பொலிவிற்கு
நோய் தொற்றுகளை தடுக்கவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும் விளக்கெண்ணெய் உதவுகிறது. மேலும் விளக்கெண்ணையை தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் பாக்டீரியாவால் ஏற்படும் சரும தொற்றுகளை தடுக்கலாம். முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்கி சரும அழகை பராமரிக்க விளக்கெண்ணெய் பயன்படுகிறது. விளக்கெண்ணையை இரவில் கண்களை சுற்றி தடவி காலையில் முகம் கழுவி வந்தால் கருவளையம் காணாமல் போகும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.
ஸ்ட்ரெச் மார்க்கை குறைக்கும்
பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை குறைக்க விளக்கெண்ணையை பயன்படுத்துவது சிறந்தது. தினமும் குளிக்க செல்வதற்கு முன் விளக்கெண்ணையை கொண்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்கலாம். இது சருமத்தில் ஏற்படும் வறட்சி போன்ற சரும பிரச்சனைகளை நீக்க உதவும். வாரத்திற்கு ஒருமுறை தொப்புளில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் தொப்புளில் உள்ள பெக்கோடிக் க்ளாண்ட் என்று சொல்லக்கூடிய முக்கிய சுரப்பி தூண்டப்படுகிறது.
தலைவலியை போக்கும்
தலைவலியிலிருந்து நிவாரணம் பெற விளக்கெண்ணையை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் விளக்கெண்ணையை சூடாக்கி கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்பொழுது இந்த எண்ணெயைக் கொண்டு உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம். இது தலைவலியைப் போக்குவதோடு மட்டுமின்றி உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்களையும் தடுக்க உதவும்.
பெண்கள் மேற்சொன்ன வழிமுறைகளின்படி விளக்கெண்ணையை தடவி வந்தால் ஆல் இன் ஆல் அழகு ராணிகளாக அனைவரது பார்வையையும் கவரலாம்.