பெண்கள் தங்களின் முகத்தின் அழகுக்கு ஏற்ப பொட்டு வைத்தால், அந்த கச்சிதமான வசீகரமான அழகே தனி அழகுதான். எந்த வடிவ முகத்திற்கு, எந்த மாதிரியான பொட்டு வைத்தால் நல்லது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. அந்த முகத்தின் அழகைக் கூட்ட பொட்டு வைக்க வேண்டியது அவசியமாகும். ஆண், பெண் என இருவரும் பொட்டு வைப்பது அவர்களின் அழகைக் கூட்டும். இருப்பினும், பொட்டு வைப்பதிலும் சரி, தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும் சரி பெண்கள் தான் அதிக ஆர்வமாக இருப்பார்கள். பல வகையான பொட்டுகள் கிடைத்தாலும், நம் பாரம்பரியத்தைப் பறைசாற்ற குங்குமம் வைப்பது தான் சிறந்தது. இன்றைய இளம் தலைமுறையினர் அழகு நிறைந்த பொட்டுகளை நெற்றியில் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் தங்களின் முகத்துக்கு ஏற்ற பொட்டை பெண்கள் வைத்தால், முகத்தின் அழகு கூடும். பெண்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.
பெண்களே உங்கள் முகம் வட்ட வடிவமாக இருந்தால், நீளமாக இருக்கும் பொட்டுகளை நீங்கள் வைக்கலாம். இது உங்கள் தோற்றத்தின் அழகைக் கூட்டும். இதன் காரணமாக மற்றவர்கள் பார்வையில் நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்.
வைர வடிவ முக அமைப்பைக் கொண்டவர்கள் டிசைன் பொட்டுகளை விடவும், எளிமையான பொட்டுகளை வைப்பது தான் அழகாக இருக்கும்.
ஓவல் வடிவ முக அமைப்பைக் கொண்ட பெண்கள் நீண்ட நெற்றியையும், கன்னத்தையும் கொண்டவர்கள். ஆகையால் இவர்கள் எந்த விதமான பொட்டுகளை வேண்டுமானாலும் தேர்வு செய்து நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். எல்லாமே அழகுதான்.
சதுர வடிவ முக அமைப்பைக் கொண்ட பெண்கள் வடிவங்களை முன்னிலைப்படுத்தும் வட்ட வடிவம் மற்றும் சந்திரன் வடிவ பொட்டுகளை வைத்துக் கொண்டால், மற்றவர்கள் பார்வைக்கு உங்கள் முகம் மேலும் அழகாகத் தெரியும்.
இதய வடிவ முகத்தைத் கொண்ட பெண்களுக்கு தட்டையான நெற்றி மற்றும் கன்னம் இருக்கும். ஆகவே இவர்கள் சற்று நீளமான மற்றும் வட்டமாக இருக்கும் பொட்டுகளை வைத்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட இந்த சிறு சிறு குறிப்புகளைப் பின்பற்றி நீங்கள் பொட்டு வைத்தால் அழகாக இருப்பீர்கள். மேலும் சில வகையான பொட்டுகள் சில நேரங்களில் விரைவாகவே நெற்றியில் இருந்து கீழே விழுந்து விடும். ஆகவே, பொட்டு வைக்கும் முன் பவுடர் போடுவது நல்லது. பவுடரைப் பயன்படுத்திய பிறகு பொட்டு வைத்தால் விரைவாக கீழே விழாமல் இருக்கும்.