ஆரோக்கியமான சருமம் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பது தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. அவற்றில், சிலர் ஆட்டுப்பாலை பயன்படுத்துகிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம் ஆட்டுப்பால் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இந்தப் பதிவில் ஆட்டுப்பாலின் சரும நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆட்டுப்பாலின் சிறப்புகள்: ஆட்டுப்பால் பிற விலங்குகளின் பாலுடன் ஒப்பிடுகையில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் இருப்பதால், சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரித்து எப்போதும் பளபளப்பாக இருக்கச் செய்கிறது.
சருமத்திற்கு ஆட்டுப்பால் அளிக்கும் நன்மைகள்:
ஆட்டுப்பால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. இது குறிப்பாக, வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் சில கலவைகள் சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது தோலின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆட்டு பாலில் உள்ள ஆன்ட்டிபாக்டீரியல் பண்புகள் சருமத்தை தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இது நம் சருமத்தின் நிறத்தை சீரமைக்க உதவும். மேலும், சருமத்தில் உள்ள புண்களை விரைவாக ஆற்றி, புதிய செல்களின் உருவாக்கத்திற்கும் இது பெரிதளவில் உதவுகிறது.
பயன்படுத்தும் வழிகள்:
ஆட்டுப் பாலில் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
ஆட்டுப் பாலில் சர்க்கரை, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
ஆட்டுப்பாலை நேரடியாகவோ அல்லது வேறு எண்ணெய்களுடனோ கலந்து முகத்தில் தடவினால், மாய்ஸ்சரைசர் போல செயல்படும். மேலும், இதை புண்கள் மீது தடவி வந்தால், விரைவில் அவை குணமாகும்.
ஆட்டுப்பால் இயற்கையான, பாதுகாப்பான சருமப் பராமரிப்பு பொருள். இது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. ஆட்டுப்பால் சருமத்தின் அழகை மேம்படுத்த உதவும் என்றாலும், ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது போன்ற பிற காரணிகளும் உங்கள் அழகை மேம்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.