நம்மில் பெரும்பாலானோருக்கு தலை வாரும்போது கொட்டும் முடியின் அளவை விட, தலைக்கு குளிக்கும்போது அதிகளவு முடி உதிர்வு ஏற்படுவதுண்டு. தலைக்கு குளிக்கும் போதும், அதற்கு பின்பும் நாம் செய்யும் சில தவறுகள் மற்றும் முறையான பராமரிப்பு கொடுக்காததே இது போன்ற முடி உதிர்வு ஏற்பட காரணமாக இருக்கலாம். 'தலைக்கு குளிக்குறதுல என்ன தவறு பண்ணிடப்போறோம்' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தலைக்கு குளிக்கும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, கன்டிஷ்னர் கூடவே, குளித்து முடித்த பின்னர் செய்ய வேண்டிய பராமரிப்பு விஷயங்களும் நிறைய உள்ளன. இவற்றை முறையாகக் கையாளாவிட்டால், அது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். அந்த வகையில்,
தலைக்கு குளிக்கும்போது செய்ய வேண்டிய முடி பராமரிப்பு முறைகள்:
தினமும் தலைக்கு குளிக்கலாம். அதில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. ஆனால், தினமும் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்தல் கூடாது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஷாம்பு பயன்படுத்துவதே நல்லது. அதிலும், அதிகளவு ஷாம்பு பயன்படுத்துவது முடி வறண்டு போக வழிவகுக்கலாம்.
ஷாம்பு பயன்படுத்திய பின்னர் முடிக்கு கண்டிஷனர் போடுவது அவசியமானது. கண்டிஷனரை முடியின் வேர்க்கால்களில் பயன்படுத்தக் கூடாது. சீரம் போல, முடியின் மேற்பரப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை சிக்கு எடுக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இவ்வாறு செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், இது சிக்கை அதிகப்படுத்துவதோடு, முடி உதிர்வுக்கும் வழிவகுக்கலாம். முடியை சிக்கு எடுத்து வாரிய பின்னர், தலைக்கு குளிக்க செல்வது நல்லது.
மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
குளிக்கும்போது, தலைக்கு அதிக அழுத்தம் தராமல் குளிக்க வேண்டும். அதிக அழுத்தம் தருவதோ அல்லது ஷவர் போன்று அதிக விசையுடன் விழும் நீரில் குளிப்பதோ முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்து முடி உதிர்வுக்கு காரணமாகலாம்.
குளித்து முடித்த பின்னர், முடியை துணியால் இறுக்கி கட்டுவது, பிழிவது, உதறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில். இது முடி உதிர்வதற்கும், முடி உடைந்து போவதற்கும் காரணமாகிறது. எனவே, ஈரமான முடியை காற்றோட்டத்தில் உலர வைத்த பின்னர், டீ- ஷர்ட் போன்ற மென்மையான துணியை உலர்த்துவதற்குப் பயன்படுத்தலாம்.
Hair dryer போன்று சூடான முறையில் முடியை உலர்த்துவதற்கு முன்பு, Heat Protection Spray பயன்படுத்த வேண்டும்.
தலை வாரும்போது, மேலிருந்து அதாவது முடியின் வேர்க்கால்களில் இருந்து வாராமல் முதலில், கீழிருக்கும் முடியின் சிக்குகளை அகற்றிவிட்டு மேலிருந்து தலை வார ஆரம்பிக்கலாம்.
அதேபோல், தலைக்கு குளித்துவிட்டு சூரிய ஒளியில் வெளியில் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக UV Protection பயன்படுத்துவது நல்லது.
பலவருடங்களாக ஒரே முடி பராமரிப்பு பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பல பேருக்கு உண்டு. ஆனால், இதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் சரும பராமரிப்பு நிபுணர்கள். அதோடு, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறும், முடியின் தன்மைக்கு ஏற்றவாறும் நாம் பயன்படுத்தும் பராமரிப்புப் பொருள்களை மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.