நாம் அனைவருமே பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தை விரும்புகிறோம். ஆனால் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் போன்ற நவீன வாழ்க்கை முறையின் காரணமாக நமது சருமம் சேதமடைந்து புத்துணர்ச்சியின்றி தோன்றலாம். செயற்கைப் பொருட்கள் நிறைந்த விலை உயர்ந்த சரும பராமரிப்பு தயாரிப்புகளை வாங்குவதற்கு பதிலாக, இயற்கையான முறையில் வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக மாற்ற முயற்சிப்பது நல்லது.
இதற்கு சியா விதை பயன்படுத்தி செய்யப்படும் பேஸ் மாஸ்க் பேருதவியாக இருக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு உங்களிடம் 2 ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 2 ஸ்பூன் பசும்பால் இருந்தால் போதும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் சியா விதைகளை பாலில் போட்டு ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் ஊறினால் போதும் சியா விதைகள் ஜெல் போன்ற அமைப்புக்கு மாறிவிடும். இந்த கலவையை பேஸ்ட் போல நன்கு கலக்கி, உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு எல்லா இடத்திலும் சமமாகத் தடவவும்.
பின்னர் 30 நிமிடங்களுக்கு அப்படியே காய விடுங்கள். இறுதியில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி மாய்ஸ்சரைசர் தடவவும். இந்த ஃபேஸ் மாஸ்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால், முகம் இயற்கையான பொலிவைப் பெறும்.
சியா விதை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதன் நன்மைகள்:
சியா விதைகள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. அவை சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், புத்துணர்ச்சி பெறவும், பளபளப்பாக்கவும் உதவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக மாற்றும்.
சியா விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைத்து முகம் சிவந்து போதல் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும். இது முகப்பரு மற்றும் சோராசியா போன்ற சரும பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
சியா விதைகளின் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன. அவை முகப்பரு மற்றும் தோல் தொற்றுக்களை சரி செய்கின்றன. பால் இயற்கையான கிளன்சராக செயல்பட்டு, சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு உருவாவதைத் தடுக்கிறது.
இப்படி இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே நீங்களும் இதை பயன்படுத்தி சருமத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.