ஆவி பிடிப்பதால் ... 
அழகு / ஃபேஷன்

அழகைக் கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள் - ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ரிவிகித உணவு, தனது வேலைகளைத்தானே செய்து கொள்ளுதல், காலை அல்லது  மாலையில் ஒரு 20 நிமிடங்கள் உடலில் வெயில் படும்படி பார்த்துக் கொள்ளுதல், அரைமணி நேரம் சிறந்த நடை பயிற்சி இவை அழகிய இடைகளையும், உள்வாங்கிய வயிற்றையும் (தொப்பை விழாமல்) அளிக்கும்.

எந்த வயதிலும் அழகுப்படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டாம். இதற்காக காசு பணம் நிறைய செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வயிறார சாப்பிட்டு, காலார நடந்து, வாய் விட்டு சிரிச்சு, குனிந்து நிமிர்ந்து வேலை செய்து, நேரம் எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து, வீட்டில் உள்ளவர்களுடன் கலந்து பழகி, வெளி உணவை தவிர்த்து (வீட்டில் சிம்பிளாக சமைத்தாலும் போதும்) நன்கு தூங்கி எழுந்தாலே ஆரோக்கியம் பிளஸ் அழகு கூடும்.

அழகுப்படுத்திக் கொள்வது என்றால் பியூட்டி பார்லருக்கு போக வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்மை அழகுப் படுத்திக் கொள்ளலாம்.

பால், கடலை மாவு, தேங்காய் எண்ணெய், தயிர், பயத்த மாவு, எலுமிச்சம் பழம், அரிசி களைந்த நீர், நல்லெண்ணெய், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், பப்பாளி என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது. இவற்றைக் கொண்டே தினம் ஒரு ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலம்பிவிட நம் சருமம் பளிச்சென மின்னும்.

இங்கு வியாபாரத்திற்காக வெள்ளையாக இருப்பதுதான் அழகு என்று நம்ப வைக்கப்படுகிறது. அதற்காக ஏகப்பட்ட கிரீம்கள் மார்க்கெட்டில் உள்ளது. சாதாரண முகப் பூச்சில் கூட ஏகப்பட்ட ரசாயன கலப்புகள். இதன் சைட் எஃபெக்ட் பற்றி யாரும் சொல்வதில்லை. சொன்னால் பிசினஸ் நடக்காது.

சருமம் பளிச்சிடவும், ஆரோக்கியமாக இருக்கவும் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை ஃப்ரூட் சாலட் (அ) வெஜிடபிள் சாலட் (அ) ஜூஸ், சூப் என எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் தினம் ஒரு பொருள் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவிபிடிக்க முகத்தில் பரு, கருந்திட்டுகள், மருக்கள் இன்றி ஜொலிக்கும்.

ஆவி பிடித்தல் - என்னென்ன பொருட்களை பயன் படுத்தலாம்?

நொச்சி இலை கொண்டு வேவு பிடித்தல், வேப்பிலை கொண்டு ஆவி பிடித்தல், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், கல் உப்பு ஒரு ஸ்பூன் கொதிக்கும் நீரில் சேர்த்து ஆவி பிடிப்பது, நான்கு வெற்றிலைகளை கிள்ளிப்போட்டு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடிப்பது, புதினா கற்பூரவள்ளி துளசி இலைகளை கசக்கி சேர்த்து கொதிக்கும் நேரில் கலந்து ஆவி பிடிப்பது, 2 கப் நீருடன் ஒரு கப் பால் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது,  ரோஜா இதழ்களையும் சந்தன பொடியையும் கலந்து ஆவி பிடிப்பது என செய்யலாம்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1) முகத்தில் உள்ள மருக்கள், அழுக்குகள், கருந்திட்டுகள் நீங்கி பளிச்சென்று மின்னும்.

2) கரும்புள்ளிகள் வெண் புள்ளிகள் நீங்கும்.

3) முதுமை தோற்றம் மறையும்.

4) முகம் பொலிவு பெறும்.

5) ஆவி பிடிப்பதால் தோலில் உள்ள அடைப்பட்ட துவாரங்கள் திறந்து கழிவுகள் வெளியேறி உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். 

6) முகப்பருக்கள் நீங்கி முகம் பளிங்கு போல் மின்னும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT