அழகு / ஃபேஷன்

வீட்டிலேயே பார்லர் அழகு!

கல்கி டெஸ்க்

பெண்களின் முக அழகிற்கு மேலும் மெருகூட்டும் தலைமுடி நீண்டு அடர்த்தியாக இருப்பதை அனைவரும் விரும்புவார்கள். அத்தகைய அழகிய முடியை எப்படிப் பெறுவது? அதற்கு வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய நல்ல கூந்தல் தைலத்தை எப்படிச் செய்வது? அவரவர் உடல்வாகிற்கு ஏற்ப கூந்தலை எப்படி அலங்கரித்துக் கொள்வது?

நீளமானமான, அடர்த்தியான கூந்தலைப் பெற, சில எளியமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

தினமும் இரவில் அல்லது காலையில் சுமார் ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாகத் தலைப் பகுதியை இரு கைகளாலும் அழுத்தி பிரெஸ் செய்தால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் முடி கொட்டுவது நின்று நன்றாக வளரும்.

head massage

கூந்தல் வளரத் தேவையான அளவு எண்ணெய்ப் பசை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பஞ்சில் சூடான எண்ணெயைத் தோய்த்து தலை முழுவதும் தடவி சீராகப் பரவச் செய்ய வேண்டும். தலையை விரல்களால் மசாஜ் செய்து நீவி விட வேண்டும்.

ஹெர்பல் ஆயில் வீட்டிலேயே தயார் செய்யும் முறை:

கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகிய கீரைகளைச் சம அளவாக எடுத்துக்கொண்டு அவற்றை அலசி நீர் போகத் துடைத்து விட்டு, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு. பச்சையாக அரைத்த கீரை விழுதை அதில் நன்கு கலக்கவும்.

பிறகு அடுப்பில் சிறிய அளவான தீயில் இந்தப் பாத்திரத்தை வைத்து எண்ணெயை நன்றாகக் காய்ச்சவும். எண்ணெய் தீய்ந்து போகாமல் கவனமாகக் காய்ச்சி இறக்கியதும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர், சிறிதளவு சுருள்பட்டை ஆகியவற்றைப் போட்டு ஓர் இரவு ஊறவைக்கவும். மறுநாள் எண்ணெயை நன்கு வடிகட்டி நறுமணம் தேவைப்பட்டால் கடைகளில் கிடைக்கும் எண்ணெயில் கலக்கக்கூடிய வாசனை திரவியத்தைக் கலந்துகொள்ளவும்.

தலைமுடியை நன்றாக வாரி விட்ட பிறகு இந்த ஹெர்பல் ஆயில் சிறிதளவை இளஞ்சூடாக சுடவைத்துப் பஞ்சை அந்த எண்ணெயில் நனைத்து தலைமுடியின் வேர்க்கால்களுக்கு இடையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். பிறகு விரல்களின் நுனியினால் தலையில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். தலையின் ஒவ்வொரு பாகத்திலும் எண்ணெய் நன்றாகப் பரவ வேண்டும்.

karisalankanni Oil

பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக நீரைக் கொதிக்க வைக்கவும். ஒரு சிறிய டவலை எடுத்து அதன் இரு நுனிகளையும் கையினால் பிடித்துக்கொண்டு டவலின் நடுப் பகுதியைச் சுடுநீரில் நனைத்து நன்றாகப் பிழிந்து அந்த ஆவியுடன் எடுத்துத் தலையில் ஒவ்வொரு இடமாக ஒற்றி எடுத்தால் மயிர்க்கால்களில் உள்ள துவாரங்கள் வழியாக வியர்த்து நீர் வெளியேறி மயிர்த் துவாரங்கள் நன்றாகத் திறந்துகொள்ளும். இவ்வாறு தலையில் உள்ள துவாரங்களை விரியச் செய்வது முடிக்கால்கள் வளர மிகவும் உதவும்.

தலைமுடி நன்றாக வளர இரு வேளைகளும் தலைவாரிப் பின்னிக் கொள்ள வேண்டும். பின்னலை எப்போதும் தளர்த்தியாகவே  பின்னிக்கொள்ள வேண்டும்.  தலைமுடியின் அடிப்பகுதி வியர்த்து அழுக்கு சேராமல் அடிக்கடி தலையை அலசி குளிக்க வேண்டும். தலையில் ஈரமில்லாமல் சுத்தமாகப் பொறுமையுடன் காய வைத்துக்கொள்ள வேண்டும்.  தலைமுடியின் நுனிப்பகுதிகளில் பிளவுகள் ஏற்பட்டால் தலை குளித்து காய வைத்த பிறகு அரை அங்குல முடியை நுனியின் வெட்டிவிட வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் செய்யலாம்.

நன்றி : மங்கையர் மலர்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT