முடிக் கொட்டும் பிரச்னை, மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் 'தலை'யாய பிரச்னையாக திகழ்கிறது. அதாவது தினசரி கொட்டும் முடியை பார்த்தே மன அழுத்தம் எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது. அந்த அளவிற்கு முடிக்கொட்டும் பிரச்னை தலை தூக்குகிறது. காரணம் என்னவோ, சரியான பராமரிப்பு இல்லாதது தான்! 'நான் முறையாக கவனிக்கிறேன்' என்று நீங்கள் சொன்னாலும், முடிக் கொட்டுவதற்கு பொடுகு, உடல் சூடு, மன அழுத்தம் என வேறு காரணங்கள் கூட இருக்கலாம்.
பல பேர் இளம் வயதிலே முடி அதிகாமாக கொட்டுகிறது என்று செயற்கை வைத்தியங்களை கையாளுகின்றனர்.
ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் ஆரம்பத்திலே கவனித்து, சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், பின் விளைவுகளைக் குறைக்க முடியும். எனவே, முடிக் கொட்டும் போது ஆரம்பத்திலே, அதைக் கவனித்து பராமரிப்பது அவசியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று இங்கு பார்க்கலாம்.
ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஆனால் ரோஸ் வாட்டர் முடிக்கொட்டுவதை நிறுத்தும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
ரோஸ் வாட்டர் முடிக்கு அளிக்கும் நன்மைகள்
சருமத்தை பளபளப்பாக்கும் என்று சொல்லப்படும் ரோஸ் வாட்டர், முடிக்கும் அதிக நன்மைகளை அளிக்கிறது. பன்னீர் ரோஸில் இருந்து கிடைக்கக்கூடிய ரோஸ் வாட்டர் கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல் படுகிறது. இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாய்ஸ்சுரைசரை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
ரோஸ் வாட்டரில் உள்ள அதிக பண்புகள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி கூந்தல் நன்றாக வளர ஊக்குவிக்கிறது.
ரோஸ் வாட்டரில் உள்ள வைட்டமின் C மற்றும் E தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும் வறட்சியான கூந்தலை கொண்டவர்கள் இந்த ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் சிறந்த பலன்களை பெற முடியும். அதாவது வறட்சியான முடிகளில் இதை பயன்படுத்தினால், தலைமுடி பளபளப்பாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
வறட்சியால் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு, புண்கள் போன்றவற்றை ரோஸ் வாட்டர் குணப்படுத்துகிறது.
சிலர் அதிக கெமிக்கல் கலந்த ஷாம்புவினை பயன்படுத்துவதால் முடி பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் ரோஸ் வாட்டரை உபயோகிக்கும்போது சிறந்த பலனை அடைய முடியும்.
இதை எப்படி பயன்படுத்தலாம்?
குளித்த பிறகு ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே பயன்படுத்தி தலைமுடியை மசாஜ் செய்யலாம்.
சுத்தம் செய்யப்பட்ட முடியில் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி பின் தலைமுடியை அலசிக் கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு அல்லது முடி பராமரிப்பு பொருட்களில் இதனை கலந்தும் பயன்படுத்தலாம்.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த ரோஸ் வாட்டரில் எந்த பக்க விளைவுகளும் கிடையாது என்பதால் தினசரி கூட இதை தலை முடிக்கு பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் போது குறைந்தது 30 நிமிடம் வரை ஊறவைத்து குளிக்கலாம்.
குறிப்பு: ரோஸ் வாட்டரை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. கடையில் வாங்கினால், அதில் ரசாயனங்கள் மற்றும் கலப்படம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.