முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற எண்ணற்ற வழிகள் உள்ளன. குறிப்பாக இயற்கை வழிகள் ஏராளம். அந்தவகையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி முகத்தின் முடிகளை அகற்றுவது என்பதைப் பார்க்கலாம்.
முகத்தில் சிறிய அளவு முடி இருந்தாலே பலருக்குப் பிடிக்காது. மற்ற சிலருக்கோ, அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கும். இதனால், வெளியில் முகத்தைக் காண்பிக்கவே கூச்சப்படுவார்கள். இதற்கு ஷேவிங் போல எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ப்ளேட் போன்ற கூர்மையான பொருட்களை முகத்தில் பயன்படுத்தத் தயங்குவார்கள். ஏனெனில், முகத்தில் காயம் ஏற்பட்டு தழும்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்குதான் இந்த எளிய வழிகள்.
லாவண்டர் மற்றும் டீ ட்ரி எண்ணெய்:
முகத்தில் தேவையற்ற முடிகள் வளர காரணமாகும் ஹிர்சுட்டிசம் என்ற நிலையை போக்க உதவுகின்றன இந்த லாவண்டர் மற்றும் டீ ட்ரி எண்ணெய். தேவையான அளவு லாவண்டர் எண்ணெய் மற்றும் அதற்கு இரண்டு மடங்காக டீ ட்ரி எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். இதனால், தேவையற்ற முடிகள் குறையும்.
பாசிப்பயறு வெந்தய மாஸ்க்:
வெந்தயம் 2 டீஸ்பூன் மற்றும் பாசிப்பயறு 2 டீஸ்பூனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். பின்னர் துணியால் மென்மையாக மசாஜ் செய்தப்படியே துடைத்தால், முடி குறையும்.
நெல்லிக்காய் மற்றும் திப்பிலி:
முதலில் நெல்லிக்காய் மற்றும் திப்பிலி இரண்டையும் உலர வைக்கவும். பின்னர் அதனை கற்றாழை ஜெல்லில் ஊறவைத்து நன்றாக மசித்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்து உலர்ந்தப் பிறகு, நீர் தொட்டு சற்று அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் தேவையற்ற முடிகளை வெளியேற்றலாம். இதனை வாரம் இரண்டு முறை செய்து வருவது நல்லது.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
சமநிலையில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் முடி இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் துணியை நனைத்து தண்ணீரைப் பிழிந்து முகத்தில் தடவி, அவற்றை அகற்ற வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இவற்றில் ஒன்றை தொடர்ந்து முயற்சித்துப் பாருங்கள். ஏனெனில், ஒருமுறை செய்வதால் மட்டும் ரிசல்ட் கிடைக்காது. அதேபோல் மாற்றி மாற்றி செய்துப் பார்ப்பதாலும் எந்தப் பயனும் இருக்காது. ஆகையால், ஒன்றை மட்டும் சில காலங்களுக்கு தொடர்ந்து முயற்சித்துப் பார்ப்பது அவசியம்.
அதேபோல், பல வழிகளை முயற்சித்தும் எந்தப் பயனும் இல்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், முகத்தில் முடி வளர உடம்பில் எதேனும் பிரச்சனைகள் இருப்பின், மருத்துவ காரணத்தை அறிந்துக் கொள்வது நல்லது.