கோடைகாலம் தொடங்கிவிட்டது, வெப்பநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவதால், வெப்பத்தை எதிர்த்துப் போராட சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. சூரிய தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க இயற்கை வழங்கிய ஒரு வரப்பிரசாதமே ரோஸ் வாட்டர். ரோஜாக்களின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க பல வகைகளில் பயன்படுத்தலாம். இந்தப் பதிவில் கோடைகாலத்தில் சருமப் பராமரிப்புக்கு ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர் பேசியல் மிஸ்ட்: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் மற்றும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்ப்பதன் மூலமாக, புத்துணர்ச்சியூட்டும் ஒரு ஃபேஸ்மிஸ்ட் நீங்களே உருவாக்க முடியும். இதை வெயில் காலங்களில் அவ்வப்போது முகத்தில் தெளித்து வருவதால், சருமம் உடனடியாக ஹைட்ரேட் ஆகி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
pH டோனர்: உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை டோனராகப் பயன்படுத்துங்கள். இதன் மென்மையாக்கும் பண்புகள் சருமத்தில் பிஎச் அளவை சமநிலைப்படுத்தி, துளைகளை அடைத்து, முகத்தில் இருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. இதனால் உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
மேக்கப் செட்டிங் ஸ்பிரே: நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மேக்கப் செட்டிங்ஸ் ஸ்ப்ரேவுக்கு பதிலாக ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். இதன் மூலமாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் மேக்கப் நீண்ட நேரம் அப்படியே இருந்து பளபளப்பை சேர்க்க உதவும். நாள் முழுவதும் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருந்து, உங்கள் மேக்கப்பிற்கு மேலும் அழகு சேர்க்கும்.
சன் பர்ன் நீக்கும்: வெயிலின் தாக்கத்தால் முகத்தில் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் ரோஸ் வாட்டர் தடவினால் விரைவில் குணமாகும். ரோஸ் வாட்டரை குளிர்ந்த நீரில் கலந்து சுத்தமான துணியில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக தடவவும். ரோஸ் வாட்டரின் அழற்சி எதிர்ப்பு பண்பு முகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைத்து, சருமம் விரைவில் குணமடைய உதவும்.
ஃபேஸ் மாஸ்க் மிக்சர்: வெயில் காலத்தில் நீங்கள் முகத்திற்கு ஏதேனும் ஃபேஸ் மாஸ் பயன்படுத்தினால் அதில் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இப்படி பயன்படுத்தும் போது அது உங்கள் சருமத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்கும்.
கூலிங் பாடி ஸ்பிரே: நீங்கள் வெளியே செல்லும்போது குளிர்ச்சியாக உணர வேண்டும் என்றால், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி நீங்களே ஒரு கூலிங் ஸ்ப்ரே தயாரித்துக் கொள்ளுங்கள். அதாவது கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு, உங்களுக்கு குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தேவைப்படும் போதெல்லாம் உடலில் ஸ்பிரே செய்து கொண்டால், எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.