சருமம் நம்மை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதுடன், நம் உடல் வெப்பநிலையை சமநிலையை வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால், பாதுகாப்பு அரணாக இருக்கும் சருமமே சில சமயங்களில் நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். அவற்றுள் ஒன்றுதான் சருமப் புற்றுநோய்.
சருமப் புற்றுநோய் என்பது தோலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து புதிய செல்களை உருவாக்கும் ஒரு நோய். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். சில சமயங்களில் இது ஒரு சிறிய காயம் அல்லது மச்சமாகத் தொடங்கி, பின்னர் புற்றுநோயாக மாறும். சில சமயங்களில் இது தோலில் ஏற்படும் புதிய வளர்ச்சியாகக் கூட இருக்கலாம்.
காரணங்கள்: சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்கள். இந்த கதிர்கள் தோளில் உள்ள செல்களை சேதப்படுத்தி புற்றுநோய் செல்களை உருவாக்கும். அதோடு புகைபிடித்தல், குடும்ப வரலாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற காரணிகளும் சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
சருமப் புற்றுநோயின் அறிகுறிகள்:
சரும புற்றுநோயின் அறிகுறிகள் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும். ஆனால், பொதுவாகக் காணப்படும் சில அறிகுறிகள்:
தோலில் ஒரு புதிய வளர்ச்சி அல்லது மச்சம் தோன்றும்.
ஏற்கனவே இருக்கும் மச்சம் அல்லது வளர்ச்சியின் அளவு வடிவம் அல்லது நிறம் மாறும்.
தோலில் புண் ஏற்பட்டு குணமடையாமல் அப்படியே இருக்கும்.
தோல் அரிப்பு அல்லது வலி.
தோலில் ரத்தக்கசிவு.
சருமப் புற்றுநோயை எவ்வாறு தடுப்பது?
முடிந்தவரை சூரிய ஒளியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெயில் காலங்களில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன், தொப்பி மற்றும் சரியான ஆடைகளை அணிவது போன்றவற்றில் கவனம் செலுத்தவும். தோலில் ஏதேனும் புதிய மாற்றம் அல்லது வளர்ச்சி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதுகுறித்து ஆலோசிக்கவும். புகைப் பழக்கத்தை கைவிடுவது, சீரான உணவு உண்பது மற்றும் உடற்பயிற்சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயைத் தடுக்க உதவும்.
சருமப் புற்றுநோய் என்பது நாம் தவிர்க்கக்கூடிய ஒரு நோய். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இதை எளிதாக குணப்படுத்தலாம். எனவே, தோலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். குறிப்பாக, சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது சருமப் புற்றுநோய் உண்டாக்காமல் பார்த்துக்கொள்ளும்.