2023ம் ஆண்டு அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக மாறி இருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்திருக்கிறது. துபாயில் நடைபெற்று வரும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் உலகில் ஏற்பட்டிருக்கக்கூடிய பருவநிலை மாற்றம், அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகள் குறித்து உலக வானிலை அமைப்பு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும், உலக வானிலை அமைப்பு 2023ம் ஆண்டு அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக மாறி இருக்கிறது என்று தரவுகளின் அடிப்படையில் புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு உலகம் முழுவதும் 174 ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2023ம் ஆண்டு அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக மாறி இருக்கிறது. நடப்பாண்டில் உலக சராசரி வெப்பநிலை 1.40° செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஏற்பட்ட அதிக வெப்பநிலையை காட்டிலும் கூடுதலாகும்.
கடந்த 9 ஆண்டு காலமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரி வெப்பநிலை உயர்வு பதிவாகி வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் இறுதி மாதங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்த அளவில் காணப்படுகிறது. தவிர, கோடைக் காலங்களில் அதிகப்படியான வெயிலால் பாதிப்பு ஏற்படுகிறது.
இது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையேயான நீர் தேவை அதிகரித்து இருக்கிறது. கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இது பூமி சந்திக்கும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாற்றமாகும். இதனால் உயிரினங்கள், மனிதர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
உலகில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெப்பத்தின் தாக்கம் கடலுக்கு அடியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது வேதியியல் மாற்றமாகவும், சூழலியல் மாற்றமாகவும் நிகழ்கின்றன என்று இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.