தற்போதைய உலகம், ‘வெப்பமயம்’ என்னும் அரக்கனின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் சில செடிகளை வைத்து வளர்த்து வருவது ஓர் அத்தியாவசியமான செயல் என்றாகி விட்டது. இதன் மூலம் சிறிதளவாவது பசுமையை கொண்டு வந்து வெப்பம் தணிய உதவலாமே! அந்த வகையில் வீட்டில் வளர்க்கக்கூடிய அருமையான செடிகளில் சினேக் பிளான்ட் (Snake Plant) முதன்மையானது என்று தாராளமாகக் கூறலாம். இதிலிருந்து கிடைக்கும் 9 வகை நன்மைகளினால் இதை, 'ஆசீர்வதிக்கப்பட்ட தாவரம்' எனவும் கூறுகின்றனர். அந்த 9 வகை நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
1. இந்தத் தாவரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கான முக்கியக் காரணம், மாசடைந்த காற்றை சுத்தப்படுத்த உதவும் அதன் குணமாகும். இது ஃபார்மல் டீ ஹைடே (Formaldehyde) மற்றும் பென்சீன் (Benzene) போன்ற காற்றிலும் சுற்றுச் சூழலிலும் கலந்துள்ள பல்வேறு நச்சுக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதில் பேருதவி புரிகிறது. இக்கருத்தை உறுதிப்படுத்தி இந்தச் செடியை இன்டோர் பிளான்டாக வளர்க்கும்படி நாசா (NASA) பரிந்துரை செய்துள்ளது.
2. சுத்தமான காற்றை வழங்க உதவி புரிவதால் இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் அதிக நன்மை அடையலாம்.
3. சினேக் பிளான்ட் வளர மண், தண்ணீர், சூரிய வெளிச்சம், உரம் போன்ற எதிலும் ஓர் குறிப்பிட்ட அளவுகோல் கிடையாது. லேஸி கார்டெனர் (Lazy Gardener) என்பவர்கள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரம் இது.
4. ஆரோக்கியமான சினேக் பிளான்ட்டின் கட்டிங் ஒன்றை எடுத்து, மண் இல்லாமல் ஒரு பாட்டில் தண்ணீருக்குள் வைத்தால் அதிலிருந்து புதிய வேர் தோன்றுவதுடன் இலைகளும் முளைத்து வளர ஆரம்பிக்கும்.
5. சினேக் பிளான்ட்டை வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ வைத்து வளர்த்து வந்தால் அது நம் மன நிலையை சந்தோஷம் நிறைந்ததாக மாற்றவும் வேலையில் நல்ல கவனம் செலுத்தவும் உதவும்.
6. ஃபெங்-ஷுய் (Feng-Shui)யின் கணிப்பில் சினேக் பிளான்ட் நேர்மறை உணர்வுகளையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய தாவரமாகக் கூறப்படுகிறது. இதன் வலுவான நீண்ட இலைகள் சக்தியையும் நேர்மறை விளைவுகளையும் அதிகளவில் கொண்டு வருவதாக சீனர்கள் நம்புகிறார்கள்.
7. மற்ற செடிகள் மற்றும் பூ வகைகளைப் போல் சினேக் பிளான்ட் பூச்சிகளையோ ஈக்களையோ தம்பால் கவர்ந்திழுப்பதில்லை.
8. சினேக் பிளான்ட் இரவில் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய குணம் கொண்டது; அதனால் நம் தூக்கத்தின் தரம் மேன்மையுறும் என்றும் நம்பப்படுகிறது.
9. சினேக் பிளான்ட்டின் நீண்ட உறுதியான பச்சை நிற இலைகள் மங்கலகரமான மஞ்சள் நிற டிசைன்களுடன் கண்களுக்கு பசுமை விருந்து அளிப்பதுடன் அழகையும் சக்தியையும் வாரி வழங்குவதாய் திகழ்கின்றன.
இந்த பிளான்ட்டை வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வளர்க்கலாம். வீட்டிற்கு உள்ளே வைக்கும்போது அந்த செடி இருக்கும் அறை முழுவதும் பசுமையும் எனர்ஜியும் நிறைந்தோங்கி மனதை மகிழ்விக்கும்.
இத்தனை நன்மை தருவதாகவும், சுலபமாக வளரக்கூடியதுமான சினேக் பிளான்ட்டை அனைவரும் வளர்ப்போம்; ஆரோக்கியம் பெறுவோம்.