கழுகின் அளவு இறக்கைகள் கொண்ட தட்டான் பூச்சிகள், ஒரு பெரிய காரின் அளவுடைய மரவட்டை மற்றும் தேள்கள் இந்த பூமியில் சுற்றித் திரிவது போன்ற ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய சாம்ராஜ்யம் உண்மையிலேயே மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு Carboniferous Period எனப்படும் காலத்தில் இருந்தது. இது டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய காலமாகும்.
Carboniferous Period: கார்போனிஃபெரஸ் காலம் தோராயமாக 300 முதல் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே ஏற்பட்டதாகும். அப்போது பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன. இது Pangaea என்ற பெயர் கொண்ட சூப்பர் கண்டமாக இருந்தது. இவை பெரும்பாலும் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பரந்த சதுப்பு நிலக் காடுகளாகும்.
ராட்சத பூச்சிகள்: கார்போனிஃபெரஸ் காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அப்போதிருந்த பூச்சிகளின் அசாதாரண அளவுதான். அத்தகைய பிரம்மாண்ட பூச்சிகளின் பரிணாமம் குறித்து இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு பல கோட்பாடுகள் வெளிவந்துள்ளன. அது எப்படி அந்த காலகட்டத்தில் பூச்சிகள் ராட்சத அளவில் இருந்தன?
ஆக்சிஜன் அளவு: அந்த காலகட்டத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இன்றைய காலகட்டத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் இருந்தது. ஆக்சிஜன் நிறைந்த சூழல் பூச்சிகள் பெரிதாக வளர அனுமதித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் ஆக்ஸிஜன் அவற்றின் வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த வேட்டையாடிகள்: பூச்சிகளின் பிரம்மாண்ட உருவத்திற்கு மற்றொரு காரணி என்னவென்றால், அந்த சமயத்தில் வேட்டையாடும் விலங்குகளின் பற்றாக்குறைதான். பூச்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விலங்குகள் நிலத்தில் இல்லாததால், பூச்சிகளின் பரிணாமம் மற்றும் அளவு பெரிதாவதற்கான சுதந்திரம் இருந்தது.
உலகை ஆண்ட ராட்சத பூச்சிகள்: கார்போனிஃபெரஸ் காலம் என்பது ஒரு சிறப்பான பல்லுயிர் பெருக்க காலமாகும். பிரம்மாண்ட பூச்சிகளைத் தவிர சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் ஏராளமான பிற உயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த சகாப்தத்தில் குறிப்பிடத்தக்க ராட்சச பூச்சிகள் என்று பார்க்கும்போது,
Maganeura: சுமார் 75 சென்டிமீட்டர் வரை இறக்கைகள் கொண்ட ஒரு தட்டான் பூச்சியை கற்பனை செய்து பாருங்கள். அதன் பெயர்தான் Maganeura. இந்த டிராகன்ஃபிளைகள் அந்த காலகட்டத்தில் வானத்தை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.
Arthropleura: ஆர்த்ரோப்ளியூரா என்பது இரண்டு மீட்டர் நீளத்திற்கு மேல் வளரக்கூடிய ஒரு பெரிய மரவட்டைப் போன்ற உயிரினமாகும். அதன் பெரிய உருவம் மற்றும் ஏராளமான கால்களுடன் அந்த சமயத்தில் காடுகளில் சுற்றித்திறந்து தாவரங்களை உண்டு செழித்து வளர்ந்தன.
Pulmonoscorpius: இந்த ராட்சதத் தேள் 70 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியதாகும். இவற்றின் அச்சுறுத்தும் தோற்றம் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி சிறிய விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டிருக்கின்றன.
கார்போனிஃபெரஸ் காலமானது அசாதாரண உயிரினங்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளால் நிரம்பிய ஒரு பண்டைய உலகத்தை பற்றிய ஒரு பார்வையை நமக்கு தெரியப்படுத்துகிறது. அப்போது செழித்து வளர்ந்த ராட்சத பூச்சிகள் அந்த காலத்தில் சுற்றுச்சூழல் நிலைமைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நமக்கு விளங்க வைக்கின்றன. இவற்றையெல்லாம் இந்த காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இவற்றை கற்பனை செய்வதே இப்படி இருக்கிறதென்றால், உண்மையில் இவையெல்லாம் இந்த காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? என சிந்தித்துப் பாருங்கள்.