நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் மருத்துவ பொருள்களில் முதன்மை இடம் தேனுக்கு உண்டு. தேன் எவ்வளவு ஒரு அரிய பொருளாக பயன்படுகிறதோ, அதைப்போலவே தேனை உற்பத்தி செய்யக்கூடிய தேனீக்களும் சுற்றுச்சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு பூச்சி இனமாகும்.
பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கக்கூடிய இந்த வகை தேனீக்கள் இல்லையென்றால் உணவின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும் என்பது ஆச்சரியமான உண்மை! காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, பூச்சிக்கொல்லி மருந்துகள், காற்று மாசுபாடு, ரசாயன உரம் போன்ற பல்வேறு காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
மனிதனின் உணவு உற்பத்தியில் 3 ல் 1 பங்கு தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற மகரந்த சேர்க்கையாளர்களை நம்பியே உள்ளது. தேனீக்கள் ஒரு தாவரத்தில் உட்காரும்போது அதில் உள்ள மகரந்த தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொரு தாவரத்திற்கு கடத்தப்படுவதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் தாவரங்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் 80 சதவீதத்திற்கு காரணமாக இருப்பவை தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற பூச்சி வகைகளே.
தேனீக்கள் பூக்களில் அமர்ந்து தேன் சேகரிக்கும் போது அதன் காலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தத்தூள் மற்றொரு பூவில் அமரும் போது அதில் உள்ள மகரந்தத்துடன் சேர்ந்து மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் இயற்கையாகவே பல்வேறு தாவரங்களும், மரங்களும் செழித்து வளர்ந்து காடுகளாகவும், சோலைகளாகவும் மாறத் தொடங்குகின்றன. எனவே தேனீக்கள் தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது உணவு உற்பத்தியிலும் முக்கிய பங்காற்றுகிறது என்றே சொல்லலாம்.
ஒருவேளை தேனீக்களால் நடைபெறும் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் போனால் தாவரங்களின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து மனித குலம் அழிவை நோக்கி செல்வதற்கு கூட வாய்ப்பு ஏற்படக்கூடும். மேலும் மாறிவரும் கால நிலைகளால் பூக்கள் முன்பு போல் உரிய காலத்தில் பூப்பதில்லை. இதனால் தேனீக்கள் கடுமையாக பாதிப்பு அடைவதோடு தாவரங்களின் பெருக்கமும் குறைய தொடங்குகிறது. குளிர்காலம் மற்றும் பூ பூக்காத காலங்களில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை நீக்குவதற்காகவே தேனீக்கள் தங்கள் கூட்டில் தேனை சேமித்து வைத்துக் கொள்கின்றன.
காலநிலை மாற்றங்களால் கடுமையான வெயில் போன்றவை ஏற்படும்போது அந்த தேன் கூட்டில் தேனீக்கள் தாக்குபிடித்து வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் காலநிலை மாற்றங்களால் தேனை சேகரிப்பதற்கு அதிகம் உழைக்க வேண்டிய தேவையையும் ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகளை தாவரங்களில் அதிகமாக பயன்படுத்தும் போது அதில் அமரும் தேனீக்கள் அதில் உள்ள விஷத்தன்மையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதுவும் தேனீக்களின் எண்ணிக்கை குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் இன்றைய நவீன காலங்களில் குறைந்து வரும் விவசாய நிலங்களால் தேனீக்கள் தேனை சேகரிப்பதற்கு நெடுந்தொலைவு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம்.
சாதாரண தேனீக்களைப் போல் இல்லாமல் காட்டு தேனீக்கள் கூடு கட்டுவதற்கும், மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கும் மிகப்பெரிய மரங்களும் மிகப் பெரிய வாழ்விடங்களும் தேவைப்படுகின்றன. ஆனால் பெருகிவரும் மனிதனின் தேவைக்கேற்ப காடுகளும் மரங்களும் அதிக அளவில் அழிக்கப்பட்டு வருவதால் அதனோடு சேர்ந்து தேனீக்களும் அழிக்கப்பட்டே வருகின்றன.
எனவே உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றக்கூடிய தேனீக்களை பாதுகாப்பது மனிதர்களின் முக்கிய கடமையாகும். தாவரங்கள் மற்றும் மரங்கள் அடங்கிய பசுமைப் பரப்பை அதிக அளவில் உருவாக்குவதும், இருக்கக்கூடிய பசுமையை அழிக்காமல் பாதுகாத்து வருவதும்தான் பற்றாக்குறை இல்லாத உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரே தீர்வாக இருக்கும்.