இயற்கையானது பலதரப்பட்ட வனவிலங்குகளால் நம்மை எப்போதுமே மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதில் ஒரு அதிசயிக்கத்தக்க உயிரினம் தான் கருப்பு புலி. குறிப்பாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மட்டுமே காணப்படும் இந்த தனித்துவமான உயிரினம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
புலிக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது?
இதன் பெயரில் குறிப்பிடுவது போல கருப்பு புலி மிக அடர்த்தியான கருமை நிறக் கோடுகளுடன் மற்ற சராசரி புலி இனங்களில் இருந்து தனித்து நிற்கிறது. பெரும்பாலான புலிகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தை தன் உடலில் அதிகமாகக் கொண்டிருந்தாலும் கருப்பு புலியின் மெலனிஸ்டிக் மாறுபாடு காரணமாக அதன் உடலில் கருப்பு நிறம் அதிகம் உள்ளது. ஆனால் மற்ற புலிகளின் பண்புகளை இதுவும் கொண்டுள்ளது.
கூர்மையான நகங்கள், பயங்கரமான தசையமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த தாடைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மாமிச உண்ணியாக இந்த புலியினம் வாழ்ந்து வருகிறது. சராசரியாக வயது வந்து ஆண் கரும்புலி 180 முதல் 260 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதன் வாலைத் தவிர்த்து அதிகபட்சமாக சுமார் 3 மீட்டர் நீளம் வரை இருக்கும். இந்த வகை புலிகளில் பெண் புலிகள் கொஞ்சம் சிறிய அளவிலேயே இருக்கும்.
வாழ்விடம்: கரும்புலிகள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒடிசாவின் அடர்ந்த காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்புகள், பரந்த ஈர நிலங்கள் மற்றும் பசுமையான காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகள் இந்த கம்பீரமான உயிரினத்திற்கு சிறந்த வாழ்விடத்தை வழங்குகிறது. சுந்தரவன சதுப்பு நிலக்காடுகள், சிம்லிபால் தேசிய பூங்கா மற்றும் பிரதர்கனிகா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை கரும்புலிகள் அதிகம் பதிவாகியுள்ள முக்கிய இடங்களாகும்.
நடத்தை மற்றும் உணவுமுறை: மற்ற புலி இனங்களைப் போலவே இதன் நடத்தையும் ஒரே மாதிரி தான் இருக்கும். தனித்த விலங்குகளான இவை அவற்றின் எல்லைக்குள் தனியாக சுற்றித்திரிந்து வேட்டையாட விரும்புகின்றன. அவற்றின் உணவில் முதன்மையாக மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தில் சுற்றித் திரியும் விலங்குகள் உள்ளன. அவற்றின் கூறிய உணர்திறன், சக்திவாய்ந்த உடல் அமைப்பு மற்றும் தந்திரமான அசைவுகள் ஆகியவற்றால் கரும்புலிகள் வலிமையான வேட்டையாடும் வல்லுனர்கள். அவற்றின் அளவைவிட பல மடங்கு இரையை உட்கொள்ளும் திறன் கொண்டவை.
இவற்றிற்கும் மற்ற புலியினங்கள் போலவே பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. வேட்டையாடுதல் மற்றும் மனித வனவிலங்கு மோதல் ஆகியவை, அவற்றின் உயிருக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் இந்த கரும்புலிகள் இந்தியாவின் ஒடிசாவில் மட்டுமே காணப்படுவதால் அவற்றின் வாழ்விடத்தை பாதுகாத்து, வேட்டையாடுதல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கமும் மக்களும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம்.