ஸ்நோர்கெலிங் எனப்படுவது நீருக்கு அடியில் முழு உடலையும் மூழ்கடித்து நீச்சல் அடிக்கும் ஒரு நீச்சல் வகை. அடிப்படை நீச்சல் திறன்களைக் கொண்ட அனைவருக்கும் ஒரு வேடிக்கையான ஓய்வு நேர விளையாட்டாகும். ஸ்கூபா டைவிங் போலல்லாமல், இதற்கு விரிவான பயிற்சி அல்லது சிக்கலான, விலையுயர்ந்த உபகரணங்கள் தேவையில்லை. ஸ்நோர்கெலிங் நீச்சலுக்கான அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ளது.
தோற்றம்: இது மிகப் பழைமையான ஒரு நீச்சல் வகையாகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பே கிரீஸில் உள்ள கடற்பாசி விவசாயிகள் வணிகம் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்துவதற்கு இயற்கையான கடல்பாசிகளை சேகரிக்க இந்த நீச்சலை பயன்படுத்தினார்கள்.
நீருக்கடியில் நீச்சல் அல்லது டைவிங் செய்வதே ஸ்நோர்கெலிங்கின் முக்கிய நோக்கம். நீரில் மூழ்கியிருக்கும்போது மேற்பரப்பிலிருந்து காற்றை சுவாசிக்க அனுமதிப்பதாகும். ஒரு ஸ்நோர்கெல் என்பது வாயிலிருந்து நீரின் மேற்பரப்பிற்கு மேலே நீண்டு செல்லும் ஒரு குழாய் ஆகும். இது நீச்சல்காரர் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது. மூச்சுத் திணறல் இல்லாமல் நீருக்கடியில் நீண்ட நேரம் செலவழிக்க உதவுகிறது.
ஸ்நோர்கெலிங் தினம்: ஒவ்வொரு வருடமும் ஜூலை 30ம் தேதி உலக ஸ்நோர்கெலிங் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகையான நீச்சல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதிலும், சுவாரசியமான கடல்வாழ் உயிரினங்களை அருகில் இருந்து பார்க்க விரும்புபவர்களுக்கும் உகந்த நீர் விளையாட்டு ஆகும்.
இந்த தினம் கடல் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வண்ணமயமான பவளப்பாறைகள் முதல் பல வகையான மீன் இனங்கள் வரை கடல்வாழ் உயிரினங்களின் அற்புதங்களை அனுபவிக்க உதவியாக இருக்கின்றன. இயற்கையான உலகை ரசிப்பதற்கும் கடல்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வை அளிப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
ஸ்நோர்கெலிங் பயிற்சி தரும் உடல், மன, சமூக நன்மைகள்:
1. இது ஒரு சிறந்த இருதய உடற்பயிற்சி ஆகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் இதயத் தசையை வலுப்படுத்துகிறது.
2. தண்ணீரில் நீந்துவது உடலுக்கு நல்ல ஒரு உடற்பயிற்சியாக இருக்கிறது. தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. கால்கள், கைகள் மற்றும் உடலின் மையப்பகுதி நன்றாக வேலை செய்வதால் தசை வலு அதிகரிக்கும்.
3. இந்த நீச்சல் பயிற்சியின்போது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தாமல் மூட்டுகளுக்கான சிறந்த பயிற்சியாக அமைகிறது. கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரித்து எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை அளிக்கிறது.
4. நீருக்கடியில் ஆய்வு செய்வதன் அமைதியான சூழல், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. இந்தப் பயிற்சிக்கு தேவைப்படும் சுவாசம், தியானம் போன்றவை அமைதியான விளைவுகளை கொண்டிருக்கும். இயற்கையுடன் இணைந்து ஈடுபடுவதும் கடல்வாழ் உயிரினங்களில் அழகை அனுபவிப்பதும் மனநிலையையும், ஒட்டுமொத்த மனநலத்தையும் அதிகரிக்கும்.
5. கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக கவனிப்பது உற்சாகத்தையும், பல்லுயிர் மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றிய அனுபவத்தையும் தருகிறது.
6. ஸ்நோர்கெலிங் என்பது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அனுபவிக்கக் கூடிய ஒரு வேடிக்கையான விளையாட்டு ஆகும். இது சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் நல்ல அழகான நீடித்த நினைவுகளை உருவாக்குகிறது.
7. ஸ்கூபா டைவிங் போல் இல்லாமல் இந்த பயிற்சிக்கு குறைந்தபட்ச உபகரணங்களும் பயிற்சியும் தேவைப்படுகிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கிறது. உடல் மன ஆரோக்கியம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சமூகத் தொடர்புகளை மேம்படுத்துதல் என்று பல விதங்களில் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.