புதுடெல்லி போன்ற பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது. அதற்கான காரணங்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
காற்று மாசுபாடு அதிகரித்ததின் காரணங்கள்:
வாகன உமிழ்வுகள்: டெல்லி போன்ற பெரிய நகரங்களில் கனரக வாகன நெரிசல் ஏற்படுகிறது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்கின்றன. மேலும், உமிழ்வு தரநிலைகளை பூர்த்தி செய்யாத பல பழைய வாகனங்கள் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும், தரம் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்துவதும் உமிழ்வை அதிகரிக்க வழி வகுக்கிறது.
தொழிற்சாலைகளின் பங்குகள்: நகரை சுற்றியுள்ள பல தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுக்கள் நேரடியாக வளிமண்டலத்தில் கலக்கின்றன. மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் திறமையற்ற செயல்களால் தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறுகின்றன. கனரக தொழிற்சாலைகள் பெரும்பாலும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் மற்றும் கன உலோகங்களை வெளியிடுகின்றன.
கட்டுமான நடவடிக்கைகள்: காலி இடத்தில் மற்றும் விவசாய நிலங்களில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானத் தளங்கள் அதிகளவு தூசியை உருவாக்குகின்றன. இவை காற்றில் கலந்து வளிமண்டலத்தை மோசமாக்குகின்றன.
பயிர் எச்சங்களை எரித்தல்: விவசாயிகள் அடிக்கடி பயிர் எச்சங்களை வயல்வெளிகளில் எரித்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்குகிறார்கள்.
தரமற்ற எரிபொருட்கள்: பல குடும்பங்கள் நிலக்கரி மற்றும் பிற தரமற்ற எரிபொருட்களை சமைப்பதற்கும் சூடாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள். இது குறிப்பிடத்தக்க உட்புற மற்றும் வெளிப்புற மாசுபாட்டை உருவாக்குகிறது.
மின் உற்பத்தி: நிலக்கரி அல்லது பிற தூய்மையற்ற எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் கணிசமான பசுமை இல்ல வாயுக்கள் (green house gase) மற்றும் மாசுபடுத்திகளை வெளியிடுகின்றன.
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நகரமயமாக்கல்: அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போர் வேலை வாய்ப்புக்காக டெல்லி போன்ற பெரிய நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்து அதன் மக்கள் தொகையை அதிகப்படுத்துகிறார்கள். விரைவான நகரமயமாக்கல் நகரங்களில் அதிக மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் பிற சேவைகளுக்கான தேவைகளை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன.
கழிவு உருவாக்கம்: இதனால் மக்கள் அதிகளவு கழிவுகளை உற்பத்தி செய்கிறார்கள். இது சரியாக நிர்வகிக்கப்படாமல் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடும் போக்கு உருவாகிறது.
போதிய பொது போக்குவரத்துயின்மை: அதிகமான மக்கள் தொகைக்கு ஏற்ற பொது போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் தனிப்பட்ட வாகனங்களில் பயணிக்கிறார்கள். இதனால் போக்குவரத்து மாசுபாடு அதிகரிக்கிறது. மேலும், சைக்கிள் ஓட்டுவதற்கும் பாதசாரிகள் நடந்து செல்வதற்குமான சரியான உள்கட்ட அமைப்பு வசதிகள் இல்லை.
தலைகீழ் வெப்பநிலை: டெல்லியின் புவியியல் வெப்பநிலை தலைகீழ் மாற்றங்களுக்கு வழிவகை செய்கிறது. அங்கு குளிர்ந்த காற்று தரையில் உள்ள மாசுபாடுகளை ஈர்க்கிறது. எனவே, குளிர்காலத்தில் காற்றின் தரம் மேலும் மோசம் அடைகிறது. திடீர் திடீரென பருவ கால வானிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தரமற்ற கழிவு மேலாண்மை: குப்பைகளை திறந்தவெளியில் எரித்தல், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் துகள்களை காற்றில் வெளியிடுதல், தவறான கழிவுகள் அகற்றும் நடைமுறைகள், நிலப்பரப்பில் உள்ள கரிமக் கழிவுகளை சிதைப்பது, மீத்தேன் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகிறது.
டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாடு என்பது ஒரு பண்முகப் பிரச்னை ஆகும். நிலையான நடைமுறைகள் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது.