Agriculture  
பசுமை / சுற்றுச்சூழல்

கழனியில் நீரைத் தேக்கி வைப்பதில் கவனம் வேண்டும்: ஏன் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் வைத்திருந்தாலே இங்கு பாதி வேலை முடிந்து விடும். இதன்படி வயலில் எவ்வளவு நீரை எப்போது தேக்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

விவசாயப் பயிர்கள் செழித்து வளர தண்ணீர் இன்றியமையாதது. வான் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்னும் நம் நாட்டில் உள்ளனர். இருப்பினும் இன்றைய நிலையில் தண்ணீரை பூமியில் இருந்து போர் மூலம் எடுக்க வேண்டியுள்ளது. தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் நிச்சயம் வீணடிக்க மாட்டார்கள். எது ஒன்றுமே அளவோடு இருந்தால் தான் பலன் கிடைக்கும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே! வயலில் கூட பயிர்களுக்கு விடப்படும் தண்ணீர் போதுமான அளவைத் தாண்டும் போது, பயிர்களுக்கே அது ஆபத்தாக முடிகின்றன. 

பொதுவாக பயிர்களின் வளர்சிக்காக விவசாயிகள் வயலில் தண்ணீரைத் தேக்கி வைப்பார்கள். இப்படித் தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது, பயிர்கள் அழுகும் நிலைக்கு வரலாம் என்பதால், எந்தெந்தப் பருவத்தில் எவ்வுளவு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்ற புரிதல் விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் வயலில் தேங்கும் போது, அதனை உரிய வடிகால் வசதியுடன் வெளியேற்றுவதும் முக்கியம்.

நீர்ப்பாசனம் செய்யும் முறை:

நெல் வயல்களில் 2.5 செ.மீ அளவிற்கு தண்ணீரைத் தேக்கி வைப்பது நல்லது.

நாற்று நடும் பருவத்தில் அதிக தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது. இல்லையெனில் பயிர்களின் வேர்கள் சுவாசிக்க முடியாமல் போவதுடன், அதன் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும்.

நிலத்தில் தேங்கியிருக்கும் அதிகப்படியான தண்ணீர், மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துகளை கரைத்து விடும். ஆகையால் பயிர்களின் வேர்களுக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய் விடும்.

பயிர்களுக்கு தழை சாம்பல் சத்துகளை மேலுரமாக இடும்போது, வயலில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு இட வேண்டும். அம்மோனியம் சல்பேட்டை மேலுரமாக இட்டால் உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். யூரியாவை மேலுரமாக இட்டால் இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சலாம்.

அறுவடை செய்வதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு முன்னர், வயலில் இருக்கும் தண்ணீரை வடித்து விட வேண்டும். இல்லையெனில் நெற்பயிரின் தாள் மடியாமல், பச்சையாகவே இருக்கும்.

நீர்ப் பாய்ச்ச வேண்டிய பருவங்கள்:

  1. வேர்ப் பிடிக்கும் தருணம்

  2. சிம்பு வெடிக்கும் தருணம்

  3. பூக்கதிர் உண்டாகும் தருணம்

  4. தொண்டைக் கதிர் பருவம்

மேற்குறிப்பிட்டுள்ள 4 பருவங்களில் கண்டிப்பாக வயலில் நீரைத் தேக்க வேண்டும். வயலுக்குத் தேவையான தண்ணீரில் தடை ஏற்பட்டால், அது மகசூலை பாதிக்கும் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நெல் வயலுக்கு நீர்ப்பாசனம் செய்யும் போது, முதலில் மேடாக இருக்கும் பகுதிக்கு நீரைப் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக தாழ்வானப் பகுதிக்கு நீரைப் பாய்ச்சலாம். ஏனெனில் மேடான பகுதியில் இருந்து தாழ்வானப் பகுதிக்கு தண்ணீர் வழிந்து செல்லும். பொதுவாக நெற்பயிர்களுக்கு தண்ணீர்த் தேவை அதிகம். இருப்பினும் எந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே நல்ல மகசூலை எடுத்து விடலாம்.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT