Seed Production 
பசுமை / சுற்றுச்சூழல்

விவசாயிகளே! விதை உற்பத்தி செய்யும் வழிமுறை தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இன்றைய காலகட்டத்தில் செயற்கை விவசாயம் அதிகரித்துள்ள நிலையில் விதைகளும், உரங்களும் தரமற்றதாகவே கிடைக்கின்றன. இதனால் மண்ணின் வளமும் கெடுகிறது. தரமான விதைகள் தான் இயற்கை விவசாயத்திற்கு வழிவகுக்கும் முதல் படியாகும். அவ்வகையில் தரமான விதைகளின் உற்பத்திக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

விவசாயத்திற்கு நிலம், தண்ணீர் மற்றும் உரம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு முக்கியமானவை தான் விதைகள். நல்ல தரமான விதைகளால் தான், அதிக மகசூலைக் கொடுக்க முடியும். அதோடு வெயில் மற்றும் மழை என இயற்கைப் பேரிடர்களைத் தாங்கி பயிர்கள் வளரவும் தரமான விதைகள் அவசியமானது.

தற்போதைய சூழலில் தானியங்களின் விலையை விடவும், விதைகளின் விலை தான் சந்தையில் அதிகமாக உள்ளன. இதனால் விதைகளுக்காகவே அதிகளவில் விவசாயிகள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு தரமில்லாத விதைகளும் சந்தையில் விற்கப்படுகிறது. ஆகையால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முன்வர வேண்டும். தேவைக்கு அதிகமான விதைளை விற்றால் இலாபமும் கிடைக்கும். இதற்கு விதை உற்பத்தி மற்றும் சேமிப்பு பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விதை உற்பத்தி:

விதைகளை உற்பத்தி செய்வதற்கு முன் அதற்கேற்ற தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உவர் மற்றும் களர் தன்மையல்லாத வளமான நிலமாக இருக்க வேண்டும். மேலும் எந்த வகை விதையை உற்பத்தி செய்யப் போகிறோமோ, அந்த வகைப் பயிரை விதை உற்பத்திக்கு முன் பயிரிட்டு இருக்கக் கூடாது.

அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படும் விதைகள் எல்லா விதமான தட்பவெப்பநிலைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் நல்ல மகசூலைக் கொடுக்க வேண்டும். ஒரே அளவுள்ள சீரான விதைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். மேலும் இந்த விதைகள் விவசாயிகளுக்கும், விற்பனைக்கும் ஏற்றதாக இருப்பது நல்லது.

விதை உற்பத்தியின் போது வளரும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி பருவம் என பருவத்திற்கு ஏற்றாற் போல் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பொதுவாக நீர்ப் பாசனம் நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்தே அமைகிறது.

விதைப் பாதுகாப்பு: விதை உற்பத்திக்குப் பிறகு சூரிய ஒளி அல்லது மின் இயந்திரங்களின் மூலம் விதைகளை நன்றாக உலர்த்த வேண்டும். விதையின் உலர் தன்மைக்கு ஏற்ப, விதையின் வளர்ச்சி இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விதைகளை சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம். அச்சமயத்தில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் விதைகளைப் பாதுகாக்க ஈரமான காற்று உட்புகாதவாறு பைகளைக் கொண்டு பாதுகாத்தல் வேண்டும். நமது தேவைக்கு ஏற்ப விதைகளைப் பயன்படுத்திக் கொண்டு, மீதி விதைகளை மற்ற விவசாயிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் விற்று இலாபம் பெறலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT