இரவில் மட்டுமே மலரக் கூடிய மனோரஞ்சித பூ , மிக அதிக நறுமணத்தை கொண்டது. தூரத்தில் இருந்தே மனோரஞ்சித பூ மலர்ந்ததை காற்றில் பரவும் நறுமணத்தைக் கொண்டே கண்டுபிடித்து விடலாம். இந்த மனோரஞ்சித மரங்கள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா, சீனா மற்றும் தைவான் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கின்றன. ஆண்டு முழுவதும் அதிக மணம் கொண்ட மஞ்சள் பூக்களை உற்பத்தி செய்கின்றன.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது என்றாலும் அழகிலும், நறுமணத்திலும் சில மலர்கள் தனித்துவம் பெறுகின்றன. திருமணத்திற்கும், திருவிழாக்களுக்கும் அலங்காரத்திற்கும் என பல்வேறு நிகழ்வுகளுக்கென மலர்கள் வளர்க்கப் படுகின்றன. இதன் அறிவியல் தாவர பெயர் ஆர்டாபோட்ரிஸ் ஹெக்ஸாபெடலஸ். சீத்தாப்பழ தாவர குடும்பத்தை சேர்ந்தது. மனோரஞ்சிதம் மரம் பூஜைக்காக இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
இந்த வாசனை மலர் வெளிர் பச்சை நிறத்துடன் மொட்டாக இருக்கும் , மலர்ந்த பிறகு மஞ்சள் நிறமாக மாறும். அதன் வசீகரிக்கும் நறுமணம் மிக அதிக தூரத்தில் கூட கண்டறியப்படும். மேலும் ஈரப்பதம் மிக்க காற்றில் இன்னும் வலுவான நறுமணத்தை திறந்தவெளியில் பரவ விட்டுக் கொண்டிருக்கும்.
இந்த மலர், பூக்கும் நேரத்தின் தனித்துவத்தாலும், சுவாசத்திற்கு இதமான நறுமணத்தாலும், தோட்டங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இது தோட்டங்களின் அழகைக் கூட்டுவதோடு, அரிதான மலர்விற்காக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஹம்மிங் பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் ஆகியவை இந்த தாவரத்தின் பூக்களால் ஈர்க்கப்பட்டடு இயற்கை மகரந்தச் சேர்க்கைகளில் உதவுகின்றன.
இந்த மலரை இந்தோ சீனக் கடவுள்களின் பூஜையில் அலங்காரத்திற்கும் வாசனைக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்து கடவுளர்களுக்கும் உகந்த மலராக மனோரஞ்சித மலர் உள்ளது. தேவர்களால் பூஜிக்கப்படும் பூவாக இது உள்ளது.
பண்டைய இந்தோ மலேயன் புராணங்களின் படி, மனோரஞ்சிதம் மலர் ஒருவரின் மனநிலையை மேம்படுத்தும் மற்றும் அவற்றை வாசனை செய்வதன் மூலம் ஒருவரை நீண்ட காலம் வாழ வைக்கும் ஆற்றல் கொண்டதாக கருதப்படுகிறது. நிறத்தின் அடிப்படையில் இது மங்களகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது ஒருவர் வீட்டில் மலர்ந்தால் நல்ல அதிர்ஷ்டம் வரும் செல்வம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
மனோரஞ்சித மலரின் மருத்துவப் பயன்கள்:
இந்த மரத்தின் தூள் இலைகள் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மையுள்ளவை. மனோரஞ்சித பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் நறுமணம் கொண்டவை. வாசனை திரவியங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுகிறது. இந்த மணம் நரம்புகளை அமைதிப்படுத்தி பதட்டத்தினை குறைக்க உதவுகிறது. நமது நாடி துடிப்பு மற்றும் சுவாசத்தை குறைக்கும் என்பதால் மனஅழுத்த சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும்.
அதே வேளையில் இருதய நோயாளிகள் இந்த வாசத்தை சுவாசிப்பது சிக்கலை ஏற்படுத்தும். இந்த எண்ணெயின் வாசனையை பலரும் விரும்புவார்கள். சில நேரம் இந்த கடுமையான வாசனை சிலருக்கு தலைவலியையும் ஏற்படுத்தும்.
மனோரஞ்சிதம் தனது அரிதான மலர்விற்கும், அதன் வாசத்திற்கும் புகழ்பெற்றது. பூக்களைச் சேகரித்து வீட்டின் உள்ளக அலங்காரமாகவும் வைக்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதிலே மலரை போட்டு விட்டால், அறை முழுவதும் வாசனை வீசும்.