பொதுவாக எங்கு சுத்தம் இருக்கிறதோ அங்கு பல நன்மைகளை Positive vibeஐ நம்மால் உணர முடியும். எப்படி இது சாத்தியமாகிறது என்பதைப் பார்ப்போம்.
நம்மைச் சுற்றி:
இன்றைய காலகட்டத்தில் ‘நம்மைப் பராமரித்துக்கொள்ளவே நேரம் போதவில்லையே; இதில் நம்மைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கணுமா’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதில்தான் மேலே குறிப்பிட்டதுபோல நமக்குத் தெரியாமல் பல நன்மைகள் வரும். குறிப்பாக நம் வீட்டைச் சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கி செய்து பாருங்கள். அதை முடித்து பின் நீங்களும் குளித்து முடித்து சுத்தம் செய்த இடத்தில் உட்கார்ந்து பாருங்கள். அதில் கிடைக்கும் ஒரு திருப்தி இருக்கே அது ஒரு தனி சுகம்.
சிலர் தங்கள் வீட்டின் தோட்டத்திலேயே ஆசைக்கு சில செடி மரங்களை வளர்ப்பார்கள். அவ்வளவுதான். அதில் வரும் குப்பைகளை தங்கள் வீட்டிற்குள், ஏன் தங்கள் ரூமுக்குள் வரும் வரை கண்டுக்கவே மாட்டார்கள். இதிலும் நீங்கள் வீட்டிற்குள் செய்ததைபோல வெளியே உள்ள குப்பைகளை அகற்றி மற்றும் சில தேவை இல்லாத கிளைகளை வெட்டி விட்டு ஒரு லுக் விடுங்கள். உங்கள் தோட்டத்தைப் பார்த்து உங்கள் கண்ணே பட்டுவிடும். அந்த அளவிற்கு உங்கள் உணர்ச்சி வெளிப்படும். விட்டால் அங்கேயே தங்கி விடுவீர்கள்.
தூசி நிறைந்த அறைக்குள் மூச்சு விட்டாலே சிலருக்கு சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்துவிடும். அது ஒரு வாரத்துக்கு ‘நம்மள வச்சு செய்துவிடும்’. இது வீட்டிற்கு மட்டும் பொருந்தாது. நாம் அன்றாடம் பயணிக்கும் சாலை, அலுவலகம், பொது இடங்கள் போன்ற எல்லா இடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘அசுத்தம் நிறைந்த இடம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்’ என்பதை உணர்ந்தாலே இந்த சமுதாயத்தில் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.
நாம் அனைவரும் வாகனங்களைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். ஆகையால்தான் இந்தியாவில் ஒரு மாதத்திற்கே பல லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகின்றன. இரு சக்கர வாகனமோ, மோட்டார் வாகனமோ, வாங்கத் தெரிந்த பலருக்கும் அதை பராமரிக்கத் தெரிவதில்லை.
தெரிந்தாலும் அதை செய்வதில்லை. ஊரில் உள்ள அனைத்து மணல்துகள்களும் தன் வண்டியில் இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் ஓட்டுகிறார்கள் சிலர். இன்னும் சில வீடுகளில் வாகனத்தை எதற்கு வாங்கினோம் என்று தெரியாமல், அது ஒரு ஓரத்தில் scrap மாடலாக தூசு நிறைந்து இருக்கும். இப்படி இருக்கும் சில விஷயங்களை மாற்றி பாருங்களேன். கொஞ்சம் உங்கள் ஆசை வாகனங்களை வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ தூசி தட்டி, கழுவி செம்மையாகத் துடைத்து பளபளன்னு வைத்துப் பாருங்கள். நீங்களே ஒவ்வொரு நாளும் ஏதோ புது வண்டியில் செல்கிறோமோ என்று உணரும் தருணம் கண்டிப்பாக வரும். அதிலும் ஒரு வகையான மகிழ்ச்சி, பூரிப்பு நாம் அடைந்து இருப்பதை உணர்வோம்.
இப்படி தூய்மை நிறைந்த விஷயங்கள் நம்மை சுற்றி இருந்தாலே போதும்; ஏதோ ஒரு தருணத்தில் யாருக்கும் அவளோ சீக்கிரம் கிடைக்காத அந்த positive vibe நம்மை நோக்கி வரும்; இல்ல வர வைப்போம்.