Interesting facts about hyenas 
பசுமை / சுற்றுச்சூழல்

துணிச்சல் மிக்க ‘கழுதைப்புலிகள்’ பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

ஆர்.வி.பதி

தோற்றத்தில் நாயைப் போலவும் நரியைப் போலவும் காணப்படும் வினோதமான ஒரு விலங்கு தமிழில் ‘கழுதைப்புலி’ என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்த விலங்கு Hyena என்று அழைக்கப்படுகிறது. கழுதை மற்றும் புலிக்கும் கழுதைப்புலிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவை கூட்டமாக இருந்தால் ஒரு சிங்கத்தையே கொல்லும் அளவிற்கு துணிச்சல் மிக்க விலங்காகும்.

கழுதைப்புலிகள் மயோசின் யுகத்தில், யுரேஷியா கண்டத்தில், அதாவது ஆசியா மற்றும் ஐரோப்பா என இரு கண்டங்களும் இணைந்த பெருநிலப்பகுதியில், அடர்ந்த காடுகளில் இருபத்தி இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நாய் போன்ற ஒரு மூதாதையரிடமிருந்து தோன்றிய ஒரு உயிரினம் என்று கருதப்படுகிறது.

கழுதைப்புலியானது பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் நடத்தையில் நாய் குடும்பத்தை ஒத்திருக்கின்றன. இவை அணைத்துண்ணி விலங்காகும். கழுதைப்புலிகள் தங்கள் நகங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் கூர்மையான பற்களைப் பயன்படுத்தி தமது உணவை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் படைத்தவை. இவை வேட்டையாடிய உணவை உண்பதோடு மட்டுமின்றி, அவற்றை சேமித்து வைத்தும் பயன்படுத்துகின்றன. பகற்பொழுதுகளில் மறைந்து வாழும் கழுதைப்புலிகள் இரவிலும் அதிகாலை நேரத்திலும் வேட்டையாடும் இயல்பு கொண்டவை. இவை தாங்களே வேட்டையாடி உண்ணும் அளவிற்கு திறமை படைத்திருந்தாலும் பெரும்பாலும் சிங்கம், புலி போன்ற பிற மிருகங்கள் வேட்டையாடித் தின்று மிச்சம் வைக்கும் மாமிசங்களைத் தின்னும் இயல்பு உடையனவாக உள்ளன.

திமிங்கிலம், யானை, சிங்கம் முதலான விலங்குகளைப் போல கழுதைப்புலிகளின் கூட்டத்திற்கு ஒரு பெண் கழுதைப்புலியே தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்துகிறது.

கழுதைப்புலி உடலின் மேற்பகுதியானது சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும். கழுதைப்புலியின் உடல் முழுவதும் கறுப்பு நிறத்தில் அடர்த்தியான வரிக்கோடுகள் காணப்படும். ஆண் கழுதைப்புலிகள் பெண் கழுதைப்புலிகளை விட உருவத்தில் பெரியதாகக் காணப்படுகின்றன. கழுதைப்புலிகளின் கால்களில் நான்கு விரல்கள் காணப்படுகின்றன.

பொதுவாக, இவை ஒரே இடத்தில் வசிப்பதில்லை. நீர்நிலைகளைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தன்மை கொண்டவை. இவற்றின் தோற்றம் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். இவை தனது எதிரிகளை பயமுறுத்த அடர்த்தியான உடல் முடிகளை செங்குத்தாகத் தூக்கி நிறுத்தும் ஆற்றலுடையவை. இவை அடர்த்தியான சற்றே நீண்ட வாலைக் கொண்டவை.

கழுதைப்புலிகள் 88 நாட்கள் முதல் 92 நாட்களில் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை உடையவை. பிறந்த குட்டிகளை ஆண் கழுதைப் புலிகள் பெண் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து பராமரித்துக் காப்பாற்றும். இவை பொதுவாக ஒன்று முதல் ஐந்து குட்டிகளை ஈனும். குட்டிகள் பிறந்த முப்பது நாட்களுக்குப் பின்னர் மாமிச உணவைச் சாப்பிடத் தொடங்கும்.

கழுதைப்புலிகள் இந்தியா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுகின்றன. புள்ளிக் கழுதைப்புலிகள், அடர் பழுப்பு நிற கழுதைப்புலிகள், ஆர்ட்வுல்ப் கழுதைப்புலிகள், வரிக் கழுதைப்புலிகள் என நான்கு வகையான கழுதைப்புலிகள் உள்ளன. அடர்த்தியான கறுப்பு நிறத்தில் ஏழு முதல் ஒன்பது வரை கோடுகள் கொண்ட வரிக் கழுதைப்புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இத்தகைய கழுதைப்புலிகள் தமிழ்நாட்டில் முதுமலை, சத்தியமங்கலம் முதலான காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் இவை கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திலும், மத்தியப்பிரதேசத்தில் சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயத்திலும், குஜராத்தில் வெலவாடார் தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன.

ஒருவகையான வினோதமான ஒலியெழுப்பி தங்கள் குழுவினருக்கு செய்திகளை இவை பரிமாறிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இவற்றின் குரல் சுமார் ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கரமாக எதிரொலிப்பதால் இவற்றின் குரலைக் கேட்பவருக்கு அச்சத்தையும் திகிலையும் ஏற்படும்.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT