Temple Elephant 
பசுமை / சுற்றுச்சூழல்

யானைகளை கோயிலில், வீடுகளில் வளர்ப்பது சரியா? சிந்திப்போமா?

ராஜமருதவேல்

சமீபத்தில் கோயில் யானை ஒன்று தன்னை பார்க்க வந்தவரை திடீரென்று தாக்கியது. அப்போது தடுக்க சென்ற துணைப் பாகனையும் அடையாளம் தெரியாமல் தாக்கிவிட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் இறந்து விட்டனர். ஒரு நாள் கழித்து கோயில் யானையோ தான் துணைப் பாகனைக் காணாமல் அழுது கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. கேரளாவில் இது அடிக்கடி நிகழும் ஒரு தொடர் கதை. யானைகளை கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் கேரள மாநிலத்தவர்கள் செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர்.

பொதுவாக யானை ஒரு வனவிலங்கு. வன விலங்குகள் மிகப்பெரிய நிலப்பரப்பில் மிகவும் சுதந்திரமாக தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்பவை. கூட்டம் கூட்டமாக வாழும் யானைகளுக்கு போதுமான அளவு உணவை காடுகள் வழங்குன்றன. காட்டில் யானைகள் ஆவேசமாக ஓடலாம், பரவசமாக தும்பிக்கையை ஆட்டலாம், காலால் தரையை மிதிக்கலாம், நினைத்த மரங்களை ஒடித்து தழைகளை திங்கலாம், பெரிய நீர் நிலைகளில் மகிழ்ச்சியாக ஆட்டம் போடலாம். ஒரு வேளை காட்டில் யானைக்கு மதம் பிடித்தாலும் அது தனியாக சுற்றி தானே அமைதியாகி விடும்.

Temple Elephant

இயல்பாக வன விலங்குகளை அதன் மூர்க்கத்தனம் காரணமாக ஊரில் வளர்க்க கூடாது. என்னதான் அது மிகுந்த அன்பாக இருந்தாலும், அது விளையாட்டாக காட்டும் அன்பை மனிதனால் தாங்க முடியாது. வீட்டு விலங்கான பசுவின் பாலை கறக்கும் போது காலை துக்கியதால் கண் பார்வை இழந்தவர்கள் உண்டு. பசு வேண்டும் என்று உதைப்பதில்லை. அது கொசுக்கடியில் அல்லது ஈ கடிக்கும் போது காலை உதறுகிறது. அதில் மனிதன் அருகில் இருக்கும் போது அவனுக்கு பாதிப்பை கொடுக்கிறது. 

பசுவை போல தான் யானையும். யானை மிகுந்த பலம் மிக்கது. அது லேசாக தும்பிக்கையால் தட்டினால் கூட மனிதருக்கு எலும்பு உடையும். அதுவும் வேகமாக தும்பிக்கையை வீசினால் அவ்வளவு தான். யானையின் அதீத பலம் அதற்கே புரியாது.

காட்டில் இருந்து கொண்டுவரப்படும் யானை கிட்டதட்ட ஒரு பொம்மையை போல பழக்கப்படுகிறது. தன் கை, கால்களை கூட ஆட்டாத அளவிற்கு சங்கிலிகளால் கட்டப்பட்டு சிறிய கொட்டகையில் அடைக்கப்படுகிறது.

யானைகள் தினசரி 10-20 கிமீ தூரம் நடக்க வேண்டும். ஆனால், தினமும் அவை 100 அடிகளை தாண்டி நடக்க அழைத்து செல்லப்படுவதில்லை. அதன் இயற்கை உணவான தாவரங்கள், பழங்களை விட்டு விட்டு, மனிதர்கள் உண்ணும் வெள்ளை அரிசி, வெல்லம், சர்க்கரை, அல்வா, இனிப்பு பண்டங்கள், சர்க்கரை மிகுந்த பழங்கள் ஆகியவற்றை உண்ணக் கொடுத்து அதற்கு விரைவிலேயே சர்க்கரை நோயையும் கொண்டு வந்து விடுகின்றனர்.

ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் யானைகள் மிகவும் நேர்த்தியாக பயிற்று விக்கப்பட்டு மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்படுகின்றன. அவர்கள் யானைகளை பெரிய பரப்பளவில் சுதந்திரமாக தன் கூட்டத்தோடு உலவ விட்டுவிடுகின்றனர். இந்த நாடுகளில் யானைகளின் கண்காணிப்பும் அதிகமாக உள்ளது.

பழங்காலத்தில் கோயில்களில் யானை இருந்தாலும் அவை கோயிலுக்கு அருகே  சிறிய காடு போன்ற நிலப்பரப்பில், பல பாகன்களுடன் பல யானைகளுடன் சேர்ந்தே பராமரிக்கப்பட்டன. அந்த யானைகளை பல வித வேலைகளுக்கும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொண்டனர். இப்போது கோயில் யானைகளுக்கு அத்தகைய வாழும் சூழ்நிலைகள் இல்லை .

இன்று பெரிய கோயில்களில் மட்டுமே யானை உள்ளது. அந்த யானையை பண்டிகை காலங்களில் மட்டும் கோயிலில் தங்க வைத்து விட்டு , மற்ற காலங்களில், மற்ற கோயில் யானைகளையும் சேர்த்து பெரிய பரப்பளவில் சரணாலயம் அமைத்து பராமரிக்கலாம். இதனால் அவற்றின் தனிமை போக்கப்படும். எப்போதும் யானைக்கு அருகில் செல்லாமல் தூரமாக நின்று ரசிப்பது தான் மனிதர்களுக்கு நலம்.

பீட்ரூட் இலைகளைப் பயன்படுத்தியே உடல் எடையை குறைக்கலாமே! 

காகங்கள் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் பார்ப்பது ஏன் தெரியுமா?

தடுமாறும் பதின் பருவப் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் - கொய்யா சட்னி செய்யலாமா?

Nudge technique - நீல நிற விளக்குகளால் தற்கொலையைத் தடுக்க முடியுமா?

SCROLL FOR NEXT