Cauvery River Issue 
பசுமை / சுற்றுச்சூழல்

"ராணுவத்தை அனுப்பவா?" கேட்டவர் யார்? எதற்காக?

பிரபு சங்கர்

‘காவிரி தண்ணீர் வரவில்லை; அதனால் கடைமடை விளை நிலங்கள் வறட்சியாகக் கண்ணீர் வடிக்கின்றன‘ என்று தமிழ்நாட்டுத் தரப்பில் ஓலம் எழ, ‘எங்களுக்கே தண்ணீர் இல்லையாம், உங்களுக்கு எதிலிருந்து எடுத்துத் தர?‘ என்று கர்நாடகம் தரப்பில் பதில் ஓலம் எழுகிறது.

அதுவே கர்நாடகத்தில் பெருமழை பெய்தால், அங்கே தேக்கி வைக்க முடியாத அபிரிமித தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வந்தே தீருகிறது. அதேசமயம் இந்த மிகை நீரையும் தாரை வார்க்க விரும்பாத கர்நாடக அரசு, தன் மாநில எல்லையை ஒட்டி ஓர் அணை கட்டி, தேக்கி வைத்துக் கொள்ள யோசிக்கிறது. 

ஆக்கபூர்வ சிந்தனையால், மன வேற்றுமை மறையும் காலத்தில்தான் இந்தத் தண்ணீர் பாலிடிக்ஸ் ஆவியாகிப் போகும். இது ஆண்டாண்டு காலப் பிரச்னை.

தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் விளங்கியபோது அவர் கர்நாடக அரசைப் பணிய வைக்க, ‘ராணுவத்தை அழைக்கவா?‘ என்று கேட்டார். உடனே கிருஷ்ண ராஜ சாகர் அணை மதகுகள் திறந்து கொண்டன. தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மத்தியில் அப்போது காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்ததும், அகில இந்திய அரசியலில் காமராஜரின் செல்வாக்கும் உயர்வாக இருந்ததும்தான் காரணம்.

இப்போது ஆட்சி மாற்றம், அதனால் மடை(மன) மாற்றத்துக்கு வழியே இல்லை. 

இது இருக்கட்டும், காவிரியை ஒரு நதியாகக் கொண்டாடுவோம், வாருங்கள். அதன் மூலத்தை இயற்கையாக ஆராயுமுன், அதன் புராண மூலத்தைத் தெரிந்து கொள்வோம்.

ருமுறை, பிள்ளைப் பேறுக்காக ஏங்கிய கவேர மகரிஷி பிரம்மகிரியில் அமர்ந்து பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தார். பிரம்மனும் காட்சி தந்து, தான் அதுநாள்வரை வளர்த்து வந்த லோபமுத்திரை என்ற கன்னியை அவருடைய மகளாக உரிமையாக்கினார். கவேர முனிவரின் மகளானதால் அவள் காவிரி ஆனாள். கூடவே மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வரம் அருள வேண்டும் என்று வளர்ப்புத் தந்தையான பிரம்மனிடம் வேண்டினாள். அவரும் அவள் காவிரி நதியாக பிரவகித்து சமூகத்தின் நலன் காப்பாள் என்று ஆசியளித்தார். 

ஒரு சமயம் இவளுடைய அழகைக் கண்ட அகத்திய முனிவர் அவளை மணமுடிக்க விரும்பினார். தன்னை எந்த மனவேதனைக்கும் ஆளாக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவள் அவரை மணந்தாள். திருமணத்திற்குப் பிறகு, ஒரு தத்துவ விசாரத்தில் அகத்தியர் ஆழமாக ஈடுபட்டிருந்தபோது, குறுக்கிட்ட காவிரியை அலட்சியப்படுத்த, அதனால் கோபமுற்ற அவள் அவரை விட்டு அகன்றாள்; பிரம்மன் அருளியபடி நதியாக பரந்து ஓடினாள். உலக நன்மைக்காக தன் பிறவியை அர்ப்பணிக்க முன்வந்த மனைவி காவிரியை, ‘நீ செல்லுமிடமெல்லாம் செழிக்கட்டும்‘ என்று ஆசி அருளினார் அகத்தியர்.

சரி, இனி இயற்கையை ஆராய்வோம், வாருங்கள்.

கர்நாடக மாநிலத்தில் பிரம்மகிரி அடிவாரத்தில் உள்ள தலைகாவிரிதான் நதி உற்பத்தியாகும் மூலத்தலம் என்றாலும், பாகமண்டலாவில்தான் காவிரி, நதியாக உருவெடுக்கிறாள். நதி பாயும் வழியில் உள்ள முக்கியமான நகரம் மைசூர். இங்கு கிருஷ்ண ராஜ சாகர் என்ற பெயரில் காவிரியின் நடுவே பெரிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அங்கிருந்து புறப்படும் காவிரி, கர்நாடக மாநில எல்லையான ஹோகனக்கல்லை அடைகிறாள். அங்கிருந்து தமிழ்நாட்டை நோக்கிப் புறப்படும் காவிரியை மேட்டூர் அணை தடுக்கிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் மழை பெய்தால் வெள்ளம், இல்லையென்றால் பஞ்சம் என்ற தலைவிதியை இந்த மேட்டூர் அணை மாற்றியது. 

இங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் பயணமாகி, பவானி அடுத்து கொடுமுடியைக் கடந்து திருச்சியை அடைகிறது. இங்கே திருவரங்கனுக்கு மாலையாகி காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. இப்படி ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்படும் காவிரியை பாண்டிய மன்னன் கரிகாலன் கல்லணை ஒன்று கட்டி நீரைத் தேக்கி வைத்தான் – ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே!

பிறகு திருவையாறு, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறையை அடையும் காவிரி, சிறு சிறு கால்வாய்களாக மாறி, காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.  இந்த நிறைவு கட்டத்திற்கு முன்னால் ஹேமவதி, அமராவதி, கபினி, பவானி, நொய்யல் ஆகிய உபநதிகள் காவிரியுடன் சங்கமமாகின்றன.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்குள் எழுநூற்று அறுபத்து ஐந்து கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, கடலில் கலக்கிறது காவிரி. 

காவிரி உண்ணும் உணவானாள்; பருகும் நீரானாள்; வளமான வாழ்வுக்கு ஆதாரமானாள், இரவைப் பகலாக்கும் மின் ஒளியுமானாள்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT