Myanmar Snub Nosed Monkey 
பசுமை / சுற்றுச்சூழல்

Snub Nosed Monkey: மியான்மர் மலைகளின் மர்ம‌ விலங்கு! 

கிரி கணபதி

2010 ஆம் ஆண்டு வடக்கு மியான்மரில் உள்ள ஓர் மலைப்பகுதியில் முற்றிலும் புதுமையான விலங்கு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மூக்கு உந்திய குரங்கு இனத்தின் ஐந்தாவது வகையான மியான்மர் மூக்கு உந்திய குரங்குகள்தான் அவை. அவற்றின் தனித்துவமான தோற்றம் மற்றும் இந்த உலகத்தில் இருந்து ஒதுங்கி வாழும் தன்மை பலரது கவனத்தை ஈர்த்தது. கருப்பு நிற ரோமங்கள், வெள்ளை முகம் மற்றும் மேல்நோக்கிய மூக்கு போன்ற அம்சங்களால் இவை மறைந்து வாழும் மர்மமான உயிரினங்களாக விளங்குகின்றன.‌ 

2010 ஆம் ஆண்டு, மியான்மர் குரங்கு பாதுகாப்பு திட்டம் என்ற அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வின்போது இந்த வித்தியாசமான குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பு ரோமங்கள், நீண்ட தாடிகள் மற்றும் நீண்ட வால்கள் கொண்ட இந்த குரங்குகள், ஏற்கனவே அறியப்பட்ட மூக்கு உந்திய குரங்கு இனங்களில் இருந்து வேறுபட்டவை என்பது தெளிவாகத் தெரிந்தது. பின்னர் நடத்தப்பட்ட மரபணு பகுப்பாய்வுக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டு இந்த புதிய இனம் Rhinopithecus Strykeri என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த குரங்கு இனத்தைக் கண்டுபிடிக்க உதவிய ஆராய்ச்சியாளர் ‘டான் ஸ்ட்ரைக்கரின்’ நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டது. 

Myanmar Snub Nosed Monkey 60 முதல் 70 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடிய ஒரு நடுத்தர அளவிலான குரங்குகள். ஆண் குரங்குகள் பெண் குரங்குகளை விட சற்று பெரிதாக இருக்கும். அவற்றின் கருப்பு ரோமங்கள், வெள்ளை முகம், தாடிகள் மற்றும் நீண்ட வால் ஆகியவை அவற்றை மற்ற குரங்குகளில் இருந்து தனித்துவப்படுத்தி காட்டும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக அவற்றின் மேலே தூக்கியபடி இருக்கும் மூக்கு பார்க்கப்படுகிறது. இது குளிர் மற்றும் ஈரப்பதமான வாழ்விடத்தில் இருந்து மூக்கை பாதுகாக்க உதவுகிறது. 

இந்த குரங்குகள் மியான்மரின் வடகிழக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள காவோலிகோங் மலைகளில் காணப்படுகின்றன. அவை 2600 முதல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊசி இலைக் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் பிரதான உணவாக பழங்கள், இலைகள், பூக்கள் மற்றும் பூச்சிகள் இருக்கின்றன. பகல் நேர விலங்குகளாக இருக்கும் இவை தங்களின் அதிகப்படியான நேரத்தை உணவு தேடுவதிலும், ஓய்வெடுப்பதிலும் செலவிடுகின்றன. 

இந்த குரங்குகள் எப்போதும் 10 முதல் 30 குரங்குகளைக் கொண்ட குழுக்களாகவே வாழும். பெண் குரங்குகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு குட்டியை ஈனுகின்றன. குட்டிகள் சுமார் ஆறு மாதங்கள் வரை தாயுடனேயே தங்கி வளரும்.‌ இந்த இனத்தின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பதால், “கடுமையான அபாயத்தில் உள்ள இனம்” என்கிற சிவப்பு பட்டியலில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த அரிய விலங்கை பாதுகாக்க மியான்மர் அரசாங்கம் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்த குரங்குகள் பூமியின் உயிரியல் பன்முகத்தன்மையின் ஒரு மதிப்புமிக்க விலங்காகும். 

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT