பருவமழைக் காலங்களில் பொதுமக்களை விடவும் அதிகமாக பாதிப்புகளைச் சந்திப்பது விவசாயிகள் தான். ஏனெனில் விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயப் பயிர்கள் தான் பருவமழையில் அதிகளவில் பாதிக்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், அதில் இருக்கும் விதிமுறைகள் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. ஆகையால், வருமுன் காப்பதே மிகச் சிறந்த வழியாகும். அதிகனமழை பெய்யும் போது பயிர்களை முழுவதுமாக பாதுகாக்க முடியவில்லை என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் ஓரளவு பயிர்களையாவது நம்மால் நிச்சயம் பாதுகாக்க முடியும். அவ்வகையில் பருவமழைக் காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
பருவமழையில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க தோட்டக்கலை விவசாயிகள், பட்டுப்போன மற்றும் காய்ந்த மரக்கிளைகளை முதலில் அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் மரங்களின் எடையைக் குறைப்பது மிகவும் முக்கியம். இதற்காக மரக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இளஞ்செடிகள் புயல் காற்றினால் பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகளை செய்வது அவசியமாகும். மரங்களின் வேர்ப் பகுதியில் மண்ணை அணைத்து, தண்டுப் பகுதிகளில் மண்ணைக் குவித்து தேவையான வடிநீர் வடிகால் வசதியை செய்ய வேண்டும்.
தென்னை:
தென்னை மரங்களில் இளநீர், தேங்காய் மற்றும் ஓலைகள் இருந்தால் மரத்தின் எடை காரணமாக, புயல் காற்றில் வேரோடு சாய நேரிடலாம். ஆகையால் இளம் ஓலைகள் தவிர்த்து மற்ற அனைத்தையும் நீக்கி விட வேண்டும். புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு உறுதியாகும் பட்சத்தில் நான்கு நாட்களுக்கு முன்னரே தென்னை மரங்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.
மா, பலா, எலுமிச்சை, கொய்யா மற்றும் முந்திரி உள்ளிட்ட மரங்களில் அதிகப்படியான இலைகள் மற்றும் பக்கவாட்டு கிளைகளை அகற்றலாம். இதன்மூலம் மரங்கள் வேரோடு சாய்வதை நம்மால் தடுக்க முடியும். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக நீர்ப் பாசனத்தை நிறுத்தினால், வேர்கள் இறுகி விடும். இதனால் புயல் காற்றில் மரங்கள் சாய்வதைத் தடுக்கலாம். சிறிய செடிகளை, தாங்கும் குச்சிகளுடன் சேர்த்து கட்டி பலத்த காற்றில் இருந்து பாதுகாக்கலாம். அதோடு நோய் தடுப்பு மருந்துகளையும் உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். பூக்கள் மற்றும் காய்கறி செடிகளில் மழைநீர் தேங்காதவாறு உரிய வடிகால் வசதியை செய்ய வேண்டும்.
வாழை, முருங்கை, பப்பாளி:
அதிக காற்றடித்தால் உடனே சாய்ந்து விடும் மரங்கள் தான் வாழை, முருங்கை மற்றும் பப்பாளி. முதலில் இத்தோட்டங்களைச் சுற்றி மழைநீர் தேங்காதவாறு வாய்க்கால் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உரங்களை இடுவதற்கு மரங்களைச் சுற்றி பாத்தி கட்டுவதை பருவமழைக் காலங்களில் தவிர்த்தல் வேண்டும். கனமழை மற்றும் புயல் காற்று குறைந்த பின் இந்த வேலைகளைச் செய்து கொள்ளலாம். சவுக்கு மற்றும் தைல மரக் கொம்புகளை இம்மரங்களுக்கு ஊன்றுகோலாகவும் நடலாம். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்திருக்க வேண்டும். 75% வரை முதிர்ந்த வாழைத்தார்களை உடனே அறுவடை செய்து விற்பனை செய்தல் வேண்டும்.
மேற்கண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி, கனமழை மற்றும் புயல் காற்றில் இருந்து தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் பாதுகாக்கலாம்.