இந்திய யானைகள் 
பசுமை / சுற்றுச்சூழல்

இந்திய யானைகளுக்கும் ஆப்பிரிக்க யானைகளுக்கும் உள்ள அரிய வித்தியாசங்கள்!

கோவீ.ராஜேந்திரன்

யானைகள் பூமியில் வாழும் மிகப்பெரிய நில விலங்கு. யானைகள் புத்திசாலிகள், மந்தைகளில் வாழும் சமூக உயிரினங்கள். உலகில்  இரண்டு வகையான யானைகள் உள்ளன. அவை ஆப்பிரிக்க யானைகள் மற்றும் ஆசிய யானைகள் அல்லது இந்திய யானைகள் என்றும் கூறுவர். இலங்கையின் வடக்குப் பகுதியில் காணப்படும் ஒரு வகை யானைகள் உருவத்தில் சிறியவை. இவற்றுக்கு தந்தம் கிடையாது. எனவே இவற்றை தனி இனமாகப் பார்க்கிறார்கள்.

இந்திய யானைகள் இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில், அசாம் , உத்தரப் பிரதேசம், நீலகிரி, மைசூர், குடகு, கேரளா மாநிலத்திலும். ஆசியாவின் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, இலங்கை, சுமத்ரா, ஜாவா, மலேசியா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. இந்திய யானைகள் ‘எலிபாஸ் மேக்ஸிமஸ்’ என்ற இனத்தைச் சேர்ந்தவை.

ஆப்பிரிக்க யானைகள் ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தின் தென் பகுதியிலும், எத்தியோப்பியா, கென்யா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க யானைகள் ‘லோக்சோடோண்டா ஆப்பிரிக்கானா’ என்ற இனத்தைச் சேர்ந்தவை.

இந்திய யானைகளுக்கும், ஆப்பிரிக்க யானைகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு. இந்திய யானைகள் சராசரி 9 அடி, மிகப்பெரிய யானைகள் 10 அடி 6 அங்குலம்  வரை இருக்கும். சராசரியாக 5 டன்கள் எடை இருக்கும். ஆப்பிரிக்க யானைகளின் சராசரி உயரம் 11 அடி, சில பெரிய யானைகள் அதற்கும் மேலாக அரை அடி முதல் ஒரு அடி அதிகம் வளரும். இதன் சராசரி எடை ஆறரை டன்கள்.

இந்திய யானைகளின் தலை ஆப்பிரிக்க யானைகளின் தலையை விட பெரியது. இந்திய யானைகளின் காதுகளை விட ஆப்பிரிக்க யானைகளின் காதுகள் பெரிதாகவும் இருக்கும். அதன் காதுகள் தோள் வரை நீண்டு இருக்கும். உலகின் அனைத்து வகையான விலங்குகளை விடப் பெரியது.

ஆப்பிரிக்க யானைகள்

யானையின் தந்தங்கள் அதன் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். தந்தங்கள் பொதுவாக  200 பவுண்டு எடை வரை இருக்கும். இந்திய யானைகளில் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு யானைகளுக்கும் நன்கு நீண்டு வளர்ந்த தந்தம் உண்டு. இந்திய யானைகளின் முன் கால்களில் 5 நகங்களும், பின் கால்களில் 4 நகங்களும் இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளின் முன் கால்களில் 4 நகங்களும், பின் கால்களில் 3 நகங்களும் இருக்கும். இந்திய யானைகளின் முதுகு குவிந்திருக்கும், இதன் நடுப்பகுதி மற்ற இடங்களை விட  உயர்ந்திருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளின் தோள்களே மற்ற பாகங்களை விட உயர்ந்திருக்கும்.

மனித உடலில் மொத்தம் 636 தசைகள்தான் உள்ளன. ஆனால், யானைகளின் துதிக்கையில் மட்டுமே 4000 தசைகளுக்கு மேல் உள்ளன. இந்திய யானைகளின் துதிக்கையின் முன் பாகத்தில் விரல் போன்ற தசையமைப்பு சற்று நீண்டு இருக்கும். இதனை துதிக்கையின் உதடு என்பர். இது இந்திய யானைகளில் ஒன்று மட்டும் இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் துதிக்கையின் முன் பகுதியில் மற்றும் பிற்பகுதியிலும் உதடுகள் உண்டு. இதற்கு இரண்டு உதடுகள்.

இந்திய யானைகள் பொதுவாக சாதுவானவை. பார்க்க அழகாகவும் இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகள் அழகற்றவை. மேலும், மூர்க்கத்தனமானது. ஆப்பிரிக்க யானைகளில் பெண் யானைகள் ஆண் யானைகளை விட மூர்க்கத்தனமானது. இந்திய யானைகளின் நிறத்தை விட ஆப்பிரிக்க யானைகளின் நிறம் சற்று அடர்த்தியாக இருக்கும். இந்திய யானைகளுக்கு மதம் பிடிக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT