கசோவரி (Cassowary) பலரும் இதுவரை கேள்விப்படாத ஒரு பெயர். கசோவரி என்பது ஒரு பறவை. இதை ஒரு ஆபத்தான பறவை என்று அழைக்கிறார்கள். புலி, சிங்கம் போன்ற விலங்குகளைத்தான் நாம் ஆபத்தான விலங்குகள் என்று கூறுவது வழக்கம். ஆனால், ஒரு பறவையை ஏன் ஆபத்தான பறவை என்று கூறுகிறார்கள். இந்த ஆபத்தான பறவையினைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கசோவரி மிகப்பெரிய ஒரு பறவை. இது பார்ப்பதற்கு நெருப்புக்கோழி மற்றும் வான்கோழிகளைப் போலக் காணப்படும். இப்பறவை மூன்றாவது உயரமான பறவையாகக் கருதப்படுகிறது. இவை அதிகபட்சமாக ஆறு அடி உயரம் வரை வளர்கின்றன. மேலும், பறவைகளில் இரண்டாவது அதிக எடை கொண்ட பறவையாகவும் இது உள்ளது. கசோவரி பறவைகள் சுமார் எழுபது கிலோ எடையுடையன. இவை நியூகினியா மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.
கசோவரி பறவைகள் தங்கள் வலிமையான கால்களில் அமைந்துள்ள கூரிய நகங்களால் எதிரிகளை மிகக் கடுமையாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. கோபம் ஏற்பட்டால் இவை மனிதர்களைக் கூட கடுமையாகத் தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்தும் இயல்புடையவை. கசோவரிக்கு மூன்று வலிமையான கால் விரல்கள் அமைந்துள்ளன. மேலும், இவை மிகவும் வலிமையான கூரான நகங்களையும் பெற்றுள்ளன. இந்த நகங்களை இவை தற்காப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்ளுகின்றன. இந்த வலிமையான கால்களையும் கூரான நகங்களையும் பயன்படுத்தி எதிரிகளை மிகவும் கொடூரமான முறையில் காயப்படுத்தி விடுகின்றன. கசோவரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதிரிகளை காலால் உதைத்து தள்ளி விட்டு விரைவாக ஓடும் ஆற்றலுடையவை.
தற்போது உலகின் தெற்கு கசோவரி, வடக்கு கசோவரி மற்றும் குள்ள கசோவரி என மூன்று முக்கிய கசோவரிகள் வகைகள் மட்டுமே வாழ்கின்றன. இவை பெரும்பாலும் அடர்ந்த காடுகளில் வாழவே விரும்புகின்றன. இவற்றின் உடலானது அடர்த்தியான வண்ணத்தில் அமைந்திருக்கும். மேலும், அவற்றின் மூக்கானது மிகவும் கூராக அமைந்திருக்கும். தலை மீது வித்தியாசமான கொண்டை போன்ற அமைப்பும் காணப்படும். இவை மிக நன்றாக நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவற்றால் பறக்க முடியாது. ஆனால், சுமார் ஐந்து அடி தூரம் வரை தாவிக்குதிக்கும் ஆற்றலுடையவை. கசோவரிகள் மிகத் துல்லியமான பார்வைத் திறனையும் கேட்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இவை மிகக் கடினமான குரலில் கத்தும் வழக்கமுடையவை. இவற்றின் இத்தகைய குரலானது பல மைல் தூரத்திற்குக் கேட்கும்.
பெண் கசோவரிகள் ஆண் பறவைகளை விட அளவில் பெரியதாகவும் அடர்த்தியான வண்ணத்திலும் காணப்படும். இவற்றிற்கு கோழிகளைப் போல வால் பகுதிகளில் இறகுகள் காணப்படுவதில்லை. இவற்றிற்கு சிறிய இறக்கைகள் காணப்படுகின்றன. இவை வேகமாக ஓடும் இயல்புடையவை.
கசோவரிகள் பெரும்பாலும் பழங்களை அதிக அளவில் சாப்பிடுகின்றன. மேலும் இவை நத்தைகள், பூச்சிகள், தவளைகள், சிறு பறவைகள், மீன்கள், எலிகள் போன்றவற்றை உணவாக சாப்பிடும்.
பெண் கசோவரியானது மூன்று முதல் எட்டு முட்டைகள் வரை இடுகின்றன. முட்டை இட்டதும் இவை அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆண் பறவையானது கூடு கட்டும். இந்தக் கூட்டில் முட்டைகளை இடும். இவ்வாறு இடும் முட்டைகளை ஆண் பறவையானது சுமார் ஐம்பது நாட்கள் வரை அடைகாக்கும். பிறந்த குஞ்சுகளை ஆண் கசோவரி பறவையானது சுமார் ஒரு வருட காலம் வரை பாதுகாக்கும். இரை பிடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும்.