சைபீரியாவின் பறந்த மற்றும் கடுமையான நிலப்பரப்புகளில் ஒரு கம்பீரமான உயிரினம் வனப்பகுதியில் வசீகரிக்கும் ராஜாவாக வசித்து வருகிறது. அதுதான் சைபீரியன் புலி. இந்த அற்புதமான வேட்டையாடும் புலி ரஷ்ய பனி நிலப்பரப்புகளில் சுற்றித் திரிகிறது. புலி இனங்களிலேயே மிகப்பெரியதாக விளங்கும் இந்த சைபீரியப் புலியைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புதிரான சைபீரியன் புலி: அமுர் புலி என்றும் அழைக்கப்படும் சைபீரியன் புலி, உலகிலேயே மிகப்பெரிய பூனை இனமாகப் பார்க்கப்படுகிறது. மோசமான குளிருக்கு ஏற்ற வகையில் அதன் அடர்த்தியான ரோமங்களுடன் பணி மூடிய ரஷ்ய டைகாவில் கம்பீரமாக சுற்றித் திரிகிறது. வரலாற்று ரீதியாக சைபீரியன் புலி வடகிழக்கு சீனாவில் இருந்து கொரிய தீபகற்பம் மற்றும் கிழக்கு ரஷ்யா வரை சுதந்திரமாக வசிக்கிறது. இருப்பினும் இவற்றின் எண்ணிக்கை வேட்டையாடுதல் மற்றும் வசிப்பிட இழப்பு போன்றவற்றால் அறிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.
சைலண்ட் கில்லர்: சைபீரியன் புலி ஒரு மிகச்சிறந்த வேட்டையாலி. அதன் உணவில் மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் எல்க் போன்றவை முதன்மையான இடத்தில் உள்ளன. அதன் தசையமைப்பு, சக்தி வாய்ந்த தாடைகள் மற்றும் கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி, மிகப்பெரிய இரையைக் கூட வீழ்த்தும் வலிமை மிக்கவை. மேலும் தன்னை மறைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக இரையை வேட்டையாடுவதற்கு பெயர் பெற்றது. தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் அமைதியாக எந்த சத்தமுமின்றி இரையை பின்தொடர்ந்து, தாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
சவால்களை சந்திக்கும் சைபீரியன் புலிகள்: பல ஆண்டுகளாகவே இந்த சைபீரியன் புலிகள் வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் உட்பட பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. 1940களில் அழிவின் விளிம்பில் இருந்த இந்தப் புலியினம், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளின் மூலமாக இன்று வரை தாக்குப்பிடித்து வாழ்கிறது. இவற்றை பாதுகாப்பதற்கு ரஷ்ய அரசாங்கம், சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இணைந்து இவற்றின் பாதுகாப்பு குறித்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலில் முக்கிய அங்கம் வகிக்கும் சைபீரியன் புலிகள் கிழக்கு ரஷ்யாவின் அடையாளமாகும். இது அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியின் வலிமை மற்றும் அழகைக் குறிக்கிறது. எனவே இந்த கம்பீரமான புலிகளை பாதுகாத்து சுற்றுச்சூழல் அமைப்பில் சமநிலையை ஏற்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.