இயற்கை உலகம் மிகவும் வித்தியாசமான பெயர்களைக் கொண்ட பல புதிரான உயிரினங்களைக் கொண்டதாகும். அத்தகைய உயிரினங்களில் ஒரு தனித்துவம் வாய்ந்த விரியன் வகை பாம்பும் உள்ளது. ஈரானில் காணப்படும் Spider-Tailed Horned Viper பாம்புகள் பார்ப்பதற்கு சிலந்தியைப் போலவே இருக்கும் வால் பகுதியைக் கொண்டிருக்கின்றன. இப்பதிவில் இந்த பாம்பின் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் பண்புகளை ஆராய்வோம்.
Spider-Tailed Horned Viper: சிலந்தி வால் கொண்ட கொம்பு விரியன் பாம்புகள் அதன் குறிப்பிடத்தக்க வால் மூலம் இத்தகைய பெயரைப் பெற்றது. அதாவது இந்த பாம்பின் வால் பார்ப்பதற்கு தத்ரூபமாக ஒரு சிலந்தியைப் போலவே இருக்கும். பாம்பின் செதில்கள் கொஞ்சம் நிளமாக வளர்ந்து பார்ப்பதற்கு சிலந்தியின் கால்களைப் போல உருமாற்றம் பெற்றிருக்கும்.
வேட்டையாடும் நுட்பம்: சிலந்தி வால் கொண்ட கொம்பு வைப்பரின் சிலந்தி போன்ற வால் அமைப்பு அதன் வேட்டையாடும் யுக்தியில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒரு மறைவான இடத்தில் இருந்துகொண்டு அதன் வாலை சிலந்தி ஓடுவது போல அசைப்பது மூலம், பார்ப்பதற்கு உண்மையான சிலந்தி ஓடுவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. இது பறவைகள் மற்றும் பல்லிகளை அதன் பக்கம் ஈர்ப்பதால், வைப்பரின் கொடிய தாக்குதலுக்கு உள்ளாகி இரையாக மாறுகின்றன.
கொம்பு வைப்பர்: சிலந்தி வால் கொண்ட கொம்பு வைப்பரின் இரண்டாம் பகுதியில் உள்ள ‘கொம்பு வைப்பர்’ என்ற பெயர், அதன் தலையில் உள்ள கொம்பு போன்ற அமைப்பால் உண்டானதாகும். இது இந்த வைப்பர் இனத்திற்கு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கிறது.
இந்த பாம்பு இனம் முற்றிலும் ரகசியமான ஒரு இனமாகும். இதனாலேயே இவற்றை காடுகளில் ஆய்வு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் சவாலாக உள்ளது. வாழ்விட அழிப்பு மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளால் குறைந்து வரும் இந்தப் பாம்புகளின் எண்ணிக்கை, சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்தத் தனித்துவமான பாம்புகள் அழிவின் விளிம்பில் இருக்கும் பாம்புளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பாம்புகளின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடத்தைகளைப் வைத்து பார்க்கும்போது, இன்னும் எத்தனை எண்ணிலடங்கா மர்மங்களை இந்த இயற்கை தன்னுள் அடக்கி வைத்துள்ளதோ? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.