மர பல்லி (Gecko) உலகெங்கிலும் மித வெப்பமானப் பகுதிகளில் வாழும் ஒரு உயிரினமாகும். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இவை Gekkonidae எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை இரண்டு சென்டி மீட்டர் முதல் அறுபது சென்டி மீட்டர் வரை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
மர பல்லிகளால் தனது கண்களை சிமிட்ட முடியாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும்படியான ஒரு நிலைத்த ஆடி அமைந்துள்ளது. இதன் மேல் ஒரு மெல்லிய பாதுகாப்புப் படலம் அமைந்துள்ளது. தமது நீளமான நாக்கினால் கண்களைச் சுத்தம் செய்து கொள்கின்றன.
மர பல்லிகளின் கால்களில் இலட்சக்கணக்கில் மெல்லிய முடி போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த முடியானது சீட்டீ (Setae) என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு முடியும் பல மிக நுண்ணிய கிளைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் உதவியோடுதான் மரப்பல்லிகள் சுவர் போன்ற பகுதிகளில் பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டு விழாமல் இருக்கின்றன. ஊர்வன இனத்திலே மர பல்லிகள் மட்டுமே பல்வேறு விதமாக ஒலிகளை எழுப்பும் தன்மை படைத்து விளங்குகின்றன. இவை குரைப்பது போன்ற ஓசையினையும் எழுப்புகின்றன. மேலும் ‘கெக் கெக்’ என்ற ஒலியினையும் வித்தியாசமான முறையில் எழுப்புகின்றன.
மர பல்லிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா என பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சுமார் ஆயிரத்து ஐநூறு வகையான மர பல்லிகள் உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குரோக்கடைல் கெக்கோ, நாப்டெயில் கெக்கோ, லீஃப் டெயில் கெக்கோ, லெப்பர்டு கெக்கோ, ட்ரீ கெக்கோ, டோகே கெக்கோ, ப்ளையிங் கெக்கோ, க்ரெஸ்டட் கெக்கோ என பல வகையான கெக்கோக்கள் உள்ளன.
மர பல்லிகளில் டோகே எனும் மர பல்லியானது அளவில் பெரியவை. இவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றில் மிகச்சிறியவை வார்ஃப் கெக்கோ. இவை அதிகபட்சமாக முக்கால் அங்குலம் மட்டுமே வளர்கின்றன. இவை கரிபியன் பகுதியில் அமைந்த பீட்டா தீவுகளில் காணப்படுகின்றன. மர பல்லி இனத்தில் மிக அரிய வகையாகக் கருதப்படுவது கோரமண்டல் ஸ்ட்ரைப்டு கெக்கோக்களாகும். இவை நியூசிலாந்து நாட்டில் மட்டுமே மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மலேசிய நாட்டில் பறக்கும் மர பல்லிகள் காணப்படுகின்றன. லெப்பர்டு கெக்கோ எனும் ஒரு வகையானது செல்லப் பிராணியாக பலரால் வளர்க்கப்படுகிறது. சில வகையான மர பல்லிகள் தங்கள் வால் முனையிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசும் திரவத்தினை ஸ்ப்ரே செய்கின்றன.
மர பல்லிகள் மற்ற பல்லிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இவை பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. கெக்கோக்களின் நாக்கு மிகவும் நீளமானவையான உள்ளன. இவற்றின் வாலானது சற்று தடிமனாக அமைந்திருக்கும். இவற்றில் இவை தேவையான உணவைச் சேமித்து வைத்துக் கொள்ளுகின்றன. உணவுகள் கிடைக்காதபோது இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு சத்தை இவை பயன்படுத்திக் கொள்ளுகின்றன.
மர பல்லிகள் பூச்சிகளை மட்டுமே மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றன. கெக்கோக்கள் கிரிக்கெட் பூச்சி மற்றும் வெட்டுக்கிளிகளை மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றன. இவற்றின் கண்கள் பெரியதாக இருப்பதால் இவற்றின் பார்வைத் திறன் மிகவும் அபாரமாக இருக்கிறது. பல்லி இனத்தில் மிகக்கூர்மையான பார்வைத் திறன் மர பல்லிகளுக்கு உள்ளன. இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றன.
பெண் மர பல்லியானது முட்டையிட்டு குஞ்சுகளைப் பிரசவிக்கின்றன. இவை ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகளை மட்டுமே இடுகின்றன. முட்டையிட்ட பின்னர் இதைப் பற்றி இவை கவலைப்படாமல் அந்த இடத்தைவிட்டுச் சென்று விடுகின்றன. இவை குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பொரிந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. சில சமயங்களில் இவை தங்கள் முட்டைகளை தாங்களே சாப்பிட்டு விடுகின்றன.
பாம்புகளே இவற்றின் முக்கியமான எதிரிகளாகும். மற்ற பல்லிகளைப் போல ஆபத்து காலங்களில் இவை தங்கள் வாலை அறுத்துக் கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுகின்றன. நாளடைவில் வாலானது பழையபடி வளர்ந்து விடுகிறது. இவை ஏழு முதல் ஒன்பது வருடங்கள் வரை வாழ்கின்றன.